×

எம்பி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இலை கட்சி நிர்வாகிகளின் உள்குத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தூங்கா நகரத்துல உள்ள அதிகாரி எதை பார்த்து நடுங்குகிறாராம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரத்து முதல்படை வீட்டில் உள்ள கோயிலின் பொறியியல் பிரிவில் உள்ள கடவுள் பெயர் கொண்டவரும், அவருக்கு மேலே உள்ள அதிகாரியும் பல்வேறு கட்டுமான வேலைகளில் தனி கவனம் செலுத்தி வர்றாங்க. அதுவும், இதற்கு முன்பு இதே இடத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிக்கு நெருக்கமா இருந்தவர்களுக்கு மட்டுமே அரசு பணிகளை அள்ளி கொடுக்கிறாங்களாம். மற்றவர்களுக்கு கிள்ளி தான் கொடுக்கிறாங்களாம். மேலும், இந்த கடவுளின் பேர் கொண்டவரின் மேற்பார்வையில் நடைபெறும் வேலைகள் அனைத்திலும் கணிசமான தொகையை கமிஷனாக கொடுத்தே ஆக வேண்டுமாம்.

இதனால் வேலையை எடுத்த புதிய காண்டிராக்டர்கள், அதிரடியாக ஒரு செயலில் இறங்கி இருக்காங்களாம். அதாவது, அதிகாரிகளுக்கு தேவை ‘கரன்சி’, நமக்கு தேவை காண்டிராக்ட். எனவே, தரமற்ற பொருட்களோடு ஏனோ தானோ என பெயரளவில் வேலையை செய்துட்டு, அவங்க சொன்னபடி கான்டிராக்ட் முடிந்துவிட்டது என்று பணத்தை வாங்கிட்டு பக்தர்களின் அடிப்படை தேவைகளான பல்வேறு விசயங்களில் இவர் எந்த கவனமும் செலுத்துவதில்லையாம். அதைவிட அதிக வருவாய் வரும், புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட கல்லா கட்டும் பணிகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம். மேலதிகாரியின் ஆசிர்வாதமும் இருப்பதால் இவருடைய காட்டில் வசூல் மழை தானாம்.

எவ்வளவு சம்பாதித்து என்ன பலன், அவர் நேரடியாக விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளாராம். லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்குமோ என்று பயம் விலக முகத்துடன் இருந்து வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘போட்டு கொடுத்து சீட்டு வாங்கும் அரசியல்வாதியை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியும், தாமரையும் கூட்டணியில இருந்து பிரிஞ்சுட்டதால நாடாளுமன்ற தேர்தல்ல தனித்தனியா நிற்க போறாங்க. அதேசமயம், மாங்கனி மாவட்ட இலைக்கட்சியில பல பேர் வேட்பாளர் கனவுல இருக்காங்களாம். அதுல இலை கட்சியின் விவிஐபிக்கு நெருக்கமாக உள்ள சிட்டி நிர்வாகி ஒருவர் எப்படியும் சீட் நமக்குதான்னு உறுதியா இருக்காராம். தேர்தல் செலவுக்கு தேவையான பணத்தை கூட தயார் செஞ்சு வைச்சுருக்காராம்.

அதேசமயம், நமக்கு போட்டியா வேறு யாரும் வந்துரக் கூடாதுன்னு, அடிக்கடி விவிஐபியை பார்த்து தன்கூட போட்டியில இருக்குறவங்கள தினமும் என்ன செய்யறாங்க… யாரிடம் பேசினாங்க… எந்த கட்சி நிர்வாகி கூட தொழில் ரீதியிலான நட்பை பயன்படுத்தி அரசியல் நகர்வை செயல்படுத்திட்டு வர்றாங்க என்கிற தகவலை சேலம்காரர் காதில் போட்டுக் கொடுத்துட்டு வார்றாராம். எது எப்படி இருந்தாலும், தனக்குத்தான் சீட் கிடைக்கனும்னு வெங்கடாசலபதியை வேண்டிக்கிட்டு இருக்காராம்… இதை கேள்விப்பட்ட அடிமட்ட தொண்டர்கள் மற்றவர்களை போட்டு கொடுப்பது ஒரு வேலைன்னு செய்கிறாரு… இதெல்லாம் தேவையா என்று பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கரன்சியை சரியாக கொடுத்து பல வருஷமாக ஒரே சீட்டில் ெதாடரும் அதிகாரி யார்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘குயின் பேட்டை மாவட்டத்துல தி என்ற எழுத்துல தொடங்குற போலீஸ் ஸ்டேஷன் இருக்காம். இந்த காக்கிகள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பள்ளிக்கு பக்கத்துல சோதனைச்சவாடி இருந்துச்சு. அதை இப்ப புதுசா கட்டி வர்றாங்க. அந்த சோதனை சாவடியில காக்கி வேலையிலயே இல்லாத நபரை வெச்சி, அபராதம் வசூலிக்கும் மெஷினையும் கொடுத்து வசூல் வேட்டை நடக்குதாம். இதுக்காக அந்த நபருக்கு தினசரி கூலி தனியாக கொடுத்துடுறாங்களாம். அதோடு அந்த லிமிட்ல இருக்குற ஸ்டார் காக்கியோட, ஓட்டுனரு மண் எடுக்க ரேட் பிக்ஸ் பண்ணி வசூல் வேட்டை நடத்துறாராம்.

ஒவ்வொரு வேலைக்கு ஒரு ஆளை நியமிச்சிருக்காங்களாம். இவங்க வாங்குறதுல குறிப்பிட்ட தொகை, கொடுக்க வேண்டியவர்களுக்கு போய் சேர்ந்துவிடுகிறதாம். இப்படி வாங்குறதுல கரெக்டா கொடுக்குறதால, மாற்றமில்லாம அங்கேயே இருக்காங்கணு, காக்கிகள் வட்டாரத்துலயே பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எந்த மாவட்டத்துல… எந்த கட்சியில கோஷ்டி பூசல் வெளியாகி இருக்கு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டத்தில் தாமரை கட்சியில் வடக்கு, தெற்கு என 2 மாவட்டமாக பிரித்து, இரண்டு தலைவர்கள் நியமிச்சு இருக்காங்க.

ஒன்றிய அரசின் மீன்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கவும், மீனவர்களை நேரில் சந்தித்து களஆய்வு நடத்த கடைசி எழுத்தில் முடியக்கூடிய பட்டினம் கடற்கரை பகுதிக்கு ஒன்றிய அமைச்சர் சமீபத்தில் வந்தாராம். மன்னர் மாவட்டத்துக்கு ஒன்றிய அமைச்சர் வருவது பற்றி லோக்கல் மாவட்ட 2 தலைவர்களுக்கு முறையான அழைப்பு போகவில்லையாம். ஒன்றிய அமைச்சரின் ஆதரவாளர்கள் மட்டும் தான் வரவேற்க போனாங்களாம். மன்னர் மாவட்டத்தில் நிகழ்ச்சி நடப்பது பற்றி தகவல் காலதாமதமாக தெரிய வந்த மாவட்ட தலைவர்கள் உச்ச கட்ட கோபத்துக்கு போனாங்களாம். இதுபற்றி கேட்ட போது ஒன்றிய அமைச்சர் தரப்பை சேர்ந்த சிலர், மாநில தலைவரை மட்டும் மல்லாமல் அவரால் நியமிக்கப்பட்ட இரண்டு மாவட்ட தலைவர்களையும் கடுமையாக வார்த்தையால் வறுத்தெடுத்தாங்களாம்.

இதனால் மன்னர் மாவட்டத்தில் தாமரை கட்சியில் பெரும் புகைச்சலே ஏற்பட்டு இருக்காம். மன்னர் மாவட்டத்தில் மாநில தலைவர் ஆதரவாளர்கள் ஒரு பிரிவாகவும், ஒன்றிய அமைச்சர் ஆதரவாளர்கள் மற்றொரு பிரிவாகவும் இருக்காங்களாம். மாநில தலைவரோ அல்லது ஒன்றிய அமைச்சரோ மாவட்டத்துக்கு ஏதாவது நிகழ்ச்சிக்கு வந்தால் அவர்களது ஆதரவாளர்கள் மட்டும்தான் வரவேற்க போறாங்களாம்.

இதனால் அவர்களுக்குள் இதுவரை மறைமுகமாக இருந்து வந்த கோஷ்டி பூசல் ஒன்றிய அமைச்சர் மூலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்ததாக மன்னர் மாவட்ட தாமரை கட்சி நிர்வாகிகளுக்குள் பேசிக்கறாங்களாம். அதாவது, அரசு பதவியில இருக்கிறவருக்கும், கட்சி பதவியில இருக்கிறவருக்கும் இடையில் புகைச்சல் அதிகரித்து இருக்காம். அதன் வெளிபாடுதான் இப்போது வெளியாகி இருக்கு என்று மன்னர் மாவட்டத்துல பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post எம்பி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இலை கட்சி நிர்வாகிகளின் உள்குத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Leaf ,wiki Yananda ,Dunga ,Uncle ,Peter ,Doonga ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...