×

சோதனை ஓட்டம் வெற்றி நாகையில் இருந்து இலங்கைக்கு 3 மணி நேரத்தில் பயணிக்கலாம்: நாளை முதல் போக்குவரத்து தொடக்கம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சோதனை ஓட்டம் வெற்றிகரகமாக முடிந்த நிலையில், நாளை முதல் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு நாளை (10ம்தேதி) முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குகிறது. இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் இறுதிக்கட்ட முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கேரளமாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட ‘‘செரியபாணி’’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு நேற்றுமுன்தினம் மாலை வந்தது.

இந்த கப்பலுக்கு துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பயணிகள் கப்பலை பார்வையிட ஏராளமான மக்கள் துறைமுகத்தில் குவிந்ததோடு, கப்பலுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த பயணிகள் கப்பல் 2 நாள் சோதனை ஓட்டமாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 10.10 மணிக்கு தொடங்கியது. இந்த கப்பலில் பயணிகள் இல்லாமல் கேப்டன் பிஜு பி.ஜார்ஜ் தலைமையில் 14 ஊழியர்கள் பயணித்தனர். நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறைக்கு சென்ற இந்த பயணிகள் கப்பல், மீண்டும் மாலை நாகப்பட்டினம் துறைமுகம் வந்து சேர்ந்தது.

இதேபோல் இரண்டாவது முறையாக இன்று (9ம்தேதி) காலையும் இந்த சோதனை ஓட்டம் நடைபெறும். தொடர்ந்து நாளை (10ம்தேதி) முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை செல்ல ரூ.6ஆயிரத்து 500 டிக்கெட் விலையுடன் 18 சதவீத ஜிஎஸ்டி வரி சேர்த்து ஒரு நபருக்கு ரூ.7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட், விசாவுடன் உள்ள நபர்கள் மட்டுமே நாகப்பட்டினம் துறைமுகத்தின் உள்ளே சென்று பயணிகள் முனையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். நேற்று காலை வரை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு செல்ல 10 பயணிகள் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சோதனை ஓட்டம் வெற்றி நாகையில் இருந்து இலங்கைக்கு 3 மணி நேரத்தில் பயணிக்கலாம்: நாளை முதல் போக்குவரத்து தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Vetri Nagai ,Sri Lanka ,Nagapattinam ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...