×

குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம்; குழந்தையை கொன்று விடுவதாக வீடியோகாலில் சென்னை இளம்பெண்ணை மிரட்டிய கணவன்

பாடாலூர்: பெரம்பலூர் அருகே குழந்தையை கொன்று விடுவதாக வீடியோகாலில் மனைவியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மேலஉசேன் நகரை சேர்ந்தவர் சந்துரு (எ)சந்தோஷ்குமார்(33). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவரது மனைவி ராதிகா(26). இவர்களது மகள் பவித்ரா(6), மகன் விஸ்வா(4). சந்துருவின் குடிப்பழக்கம் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கருத்து வேறுபாடு முற்றியதால் ராதிகா கணவருடன் கோபித்துக்கொண்டு சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார். கடந்த 8 மாதங்களாக சென்னையில் தங்கி அங்கு கூலி வேலைக்கு சென்று வருகிறார். குழந்தைகள் இருவரும் சந்தோஷ்குமாருடன் உள்ளனர்.

மனைவியை குடும்பம் நடத்த வருமாறு நேரிலும், தொலைபேசியிலும் சந்துரு பல முறை அழைத்துள்ளார். ஆனால், ராதிகா வர மறுத்து விட்டாராம். குழந்தைகள் மீது ராதிகாவுக்கு அளவுகடந்த பாசம் உண்டு. அதிலும் குறிப்பாக மகன்
விஸ்வா என்றால் ராதிகாவுக்கு உயிர். தனது கணவர் சந்துரு குடும்பம் நடத்த போனில் அழைக்கும்போதெல்லாம் மகனை மட்டும் தன்னுடன் அனுப்புமாறு ராதிகா கெஞ்சிக் கேட்டுக்கொள்வார். இதனால் தனது மகன் விஸ்வாவை வைத்தே மனைவியை வழிக்கு கொண்டுவருவது என சந்துரு முடிவு செய்தார்.

அண்மையில் தனது செல்போனிலிருந்து வீடியோகாலில் மனைவியை தொடர்புகொண்ட சந்துரு, குடிபோதையில் ஒரு கையில் கத்தியை வைத்துக்கொண்டு மற்றொரு கையில் தனது 4 வயது மகன் விஸ்வாவை பிடித்துக்கொண்டு, குடும்பம் நடத்த வரவில்லை என்றால் குழந்தையை குத்தி கொலை செய்துவிடுவேன் என மிரட்டி நாடகமாடியுள்ளார். இதனை உண்மை என நம்பிய ராதிகா பதறித்துடித்தார். தனது குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சிய ராதிகா நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு விரைந்து வந்து குன்னம் போலீசில் புகார் செய்தார். மேலும் தந்தையே தனது குழந்தையை கொலை செய்து விடுவதாக மனைவிக்கு மிரட்டல் விடுத்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் மாவட்ட சட்டம்சார் நன்னடத்தை அலுவலர் கோபிநாத் சந்துரு வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் குன்னம் போலீசார் வழக்கு பதிவுசெய்து சந்துருவை கைது செய்து குன்னம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளைச்சிறையில் அடைத்தார். குழந்தைகள் 2 பேரையும் மீட்ட போலீசார் அவர்களை தாய் ராதிகாவிடம் ஒப்படைத்தனர்.

The post குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம்; குழந்தையை கொன்று விடுவதாக வீடியோகாலில் சென்னை இளம்பெண்ணை மிரட்டிய கணவன் appeared first on Dinakaran.

Tags : Waliber ,Perambalur ,Perambalur District ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை