×

ஒட்டனூர் பகுதியில் விவசாயம் செய்ய தடை

தர்மபுரி, அக்.8: மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததன் எதிரொலியாக காவிரி கரையான தர்மபுரி மாவட்டம் ஒட்டனூர் அருகே நீர்த்தேக்க பகுதியில் விவசாயம் செய்ய ஆயத்தமாகியுள்ள நிலையில், வனத்துறை தடையால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா நாகமரை, ஒட்டனூர், ஏமனூர், சித்திரப்பட்டி, செல்லமுடி, ஏர்க்கோல்பட்டி, வத்தல்பட்டி, காட்டு மோட்டூர், புது நாகமரை, குருக்களையனூர், கொண்டையனூர், பழையூர் உள்ளிட்ட கிராமங்கள் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியையொட்டி அமைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணையின் 100 அடிக்கு மேல் நிரம்பும்போது, இப்பகுதியில் தண்ணீர் ததும்பியவாறு கடல்போல் காட்சியளிக்கும். இக்கிராமங்களை தொட்டபடி தண்ணீர் தேங்கி நிற்கும்.

நாகமரை, ஒட்டனூர், ஏமனூர் ஆகிய கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம், மீன் பிடித்தல், கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றை தொழிலாக கொண்டுள்ளனர். இக்கிராம மக்கள் மேட்டூர் அணை கட்டியபோது தங்களுடைய சொந்த விளை நிலங்களை கொடுத்துள்ளனர். இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையும்போது இப்பகுதிகளில் கம்பு, சோளம், நிலக்கடலை, மக்காச்சோளம் மற்றும் குதிரைவாலி உள்ளிட்ட முழுவடை பயிர் சாகுபடி செய்வது வழக்கமாகும். அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கும்போது, பயிர் எந்த நிலையில் இருந்தாலும் அறுவடை செய்து கொள்கின்றனர்.

ஒராண்டில் அதிகபட்சம் 3 மாதங்கள் மட்டுமே பயிர்களை சாகுபடி செய்து, அறுவடை செய்கின்றனர். கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக 3 தலைமுறையாக அணையில் தண்ணீர் வற்றும் காலக்கட்டத்தில், இங்குள்ள விவசாயிகள், காவிரி ஆற்றுப்படுகையில் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து தற்போது 32 அடியாக சரிந்துள்ளது. இதனால், மேட்டூர் அருகே பண்ணவாடி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், நீர்த்தேக்க பகுதியில் பயிர் சாகுபடியில் தீவிரமாக இறங்கிவிட்டனர். இதையடுத்து, தர்மபுரி மாவட்டம் நாகமரை, ஒட்டனூர், ஏமனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், தண்ணீர் வற்றிய பகுதியில் விவசாயம் செய்ய முயன்றபோது, வனத்துறையினர் தடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஒட்டனூர் காவிரி ஆற்றில் வடபகுதி தர்மபுரி மாவட்டமாகவும், ஆற்றின் தெற்கு பகுதி சேலம் மாவட்டமாகவும் உள்ளது. அணையின் நீர்மட்டம் குறைந்ததால், அப்பகுதியில் விவசாயம் களை கட்டியுள்ளது. ஆனால், ஒட்டனூர் காவிரி படுகை பகுதியில் இந்தாண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள வனத்துறை அனுமதி மறுத்தது. இதனால், விவசாயத்தை நம்பியுள்ள சுமார் 2 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேட்டூர் அணை நிரம்பும்போது இங்கு எவ்வித விவசாய பணிகளும் மேற்கொள்ள முடியாது. தண்ணீர் குறைவாக இருக்கும் காலத்தில் மட்டுமே, விவசாய பணிகளை தொன்றுதொட்டு மேற்கொண்டு வருகிறோம். சாகுபடி நிலத்திற்கு பட்டா கிடையாது. ஆனால், ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வந்துள்ளோம்.

அதேபோல், இந்த ஆண்டும் விவசாய பணிகளை மேற்கொள்ள வனத்துறை அனுமதியளிக்க வேண்டும். இதுகுறித்து ஆய்வுக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளோம் என்றனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட வனத்துறை அலுவலர் அப்பலநாயுடுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, நெருப்பூர் கிராமத்தை ஒட்டியுள்ள பதனவாடி காப்புக்காட்டிற்குள் காவிரி ஆற்றில் சிலர் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். அதற்கு வனத்துறை தடை விதிக்கவில்லை. அதேவேளையில், அப்பகுதியானது வனவிலங்குகள் வலசை போகும் இடமாக கண்டறியப்பட்டுள்ளது. யானை, காட்டு மாடு, சிறுத்தை, செந்நாய், புள்ளிமான், கடமான், உடும்பு, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள் நடமாடும் பகுதியாகும்.

இப்பகுதிகளில் அவ்வப்போது மனித -விலங்குகள் மோதல், பயிர்சேதம், கால்நடைகள் சேதம் மற்றும் உடைமைகள் சேதம் ஆகியவை நடந்த வண்ணம் உள்ளன. எனவே, விவசாயம் செய்ய அனுமதி வழங்கும் பட்சத்தில், மனித -விலங்கு மோதல்கள் மற்றும் பயிர், உடைமை, கால்நடை சேதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், வனவிலங்குகளை துன்புறுத்தும் அபாயமும் காணப்படுகிறது. தமிழ்நாடு வனச்சட்டம், வனப்பாதுகாப்பு சட்டம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி வனப்பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ள அனுமதி இல்லை. ஆனால், பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட ஒட்டனூர், நாகமரை, சித்திரப்பட்டி, செல்லமுடி, ஏர்கோல்பட்டி, வத்தல்பட்டி, காட்டு மோட்டூர், புதுநாகமரை, குருக்களையூர், கொண்டையனூர், பழையூர் ஆகிய கிராமங்களில் வருவாய்துறை, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் விவசாயம் செய்வதற்கு வனத்துறை குறுக்கே நிற்கப்போவதில்லை என்றார்.

The post ஒட்டனூர் பகுதியில் விவசாயம் செய்ய தடை appeared first on Dinakaran.

Tags : Ottanur ,Dharmapuri ,Mattur Dam ,Dharmapuri district ,Kaviri River ,Otanur ,Dinakaraan ,
× RELATED நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்