×

என்எஸ்சி போஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

 

தண்டையார்பேட்டை, அக்.8: என்எஸ்சி போஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைத்த 50 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. பாரிமுனை, சவுகார்பேட்டை, பர்மா பஜார், ரத்தன் பஜார், பார்க் டவுன் ஆகிய பகுதிகளில் மொத்த விற்பனை கடைகள் அதிக அளவு உள்ளன. இதனால் பொருட்களை வாங்க நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வருகின்றனர். இதனால் பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் சாலையோர நடைபாதையை பலர் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருவதால் மாநகர பேருந்துகள், கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் செல்லும்போது கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் நெரிசலில் சிக்கி தவிப்பதுடன், நடந்து செல்வதற்கு கூட கடும் அவதிப்பட வேண்டி உள்ளது. எனவே, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் உத்தரவின் பேரில், வடக்கு துணை ஆணையர் குமார் மேற்பார்வையில் என்எஸ்சி போஸ் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் பூக்கடை மற்றும் வடக்கு கடற்கரை ஆகிய போக்குவரத்து போலீசார் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது சாலை ஓரத்தில் ஆக்கிரமிப்பு செய்து நடத்திய 50க்கும் மேற்பட்ட கடைகளை போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தினர். இதேபோல் தொடர்ந்து கடை நடத்தினால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், அப்போது கலைந்து செல்லும் ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் அதே பகுதியில் அமர்ந்து வியாபாரம் செய்வது தொடர் கதையாக உள்ளது.

The post என்எஸ்சி போஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : NSC Bose Road ,Thandaiyarpet ,Barimuna ,Saukarpet ,Dinakaran ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...