×

திருவாரூர், நன்னிலம் பகுதியில் மழை

திருவாரூர், அக். 8: திருவாரூர் மற்றும் நன்னிலம் பகுதியில் நேற்று பெய்த மிதமான மழையின் காரணமாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சம் என்பது ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டுமே என்ற நிலையில் நடப்பாண்டில் தற்போது வரையில் வெயிலின் உச்சம் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இந்த வெயில் என்பது மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சதம் (100 டிகிரி) அடித்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்திலும் தினந்தோறும் 90 முதல் 95 டிகிரி வரையில் அடித்து வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் நன்பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

இருப்பினும் தற்போது இருந்து வரும் நவீன காலத்தில் குடும்ப சூழல் காரணமாகவும், பணி காரணமாகவும் வெளியில் செல்வதை தவிர்க்க முடியாது என்ற நிலையிலும், குடை பிடித்தவாறும், பெண்கள் தங்களது புடவை மற்றும் துப்பட்டாவினால் தலைமையில் மூடியவாறும், வயதான ஆண்கள் தங்களது துண்டால் தலையை மூடியவாறும் வெளியில் சென்று வருகின்றனர். தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் அக்கினியை விட மிகவும் அதிகமாக இருந்து வரும் இந்த வெயில் காரணமாக பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட 5 லட்சம் ஏக்கரிலான குறுவை பயிர்களுக்கு கர்நாடகா அரசிடமிருந்து உரிய நீர் கிடைக்காததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் உரிய தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே திருவாரூர் மாவட்டத்திலும் ஒரு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கரில் குறுவை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த பயிர்களுக்கும் போதிய நீர் வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரையில் வழக்கம் போல் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 3 மணியளவில் மாவட்டம் முழுவதும் மேகமூட்டம் ஏற்ப்பட்டது. அதன்பின்னர் 5 மணியளவில் திருவாரூர் மற்றும் நன்னிலம் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன்காரணமாக குறுவை பயிர்களுக்கு நீர் கிடைத்துள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post திருவாரூர், நன்னிலம் பகுதியில் மழை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur, Nannilam ,Tiruvarur ,Nannilam ,Dinakaran ,
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...