×

தஞ்சாவூரில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டி

தஞ்சாவூர்,அக்.8: தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டிகளை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 2023-2024ம் ஆண்டிற்கான விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும்\” என அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அக்டோபர் மாதம் 7ம்தேதி மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நடத்திட அரசாணை பெறப்பட்டுள்ளது. இதைடுத்து 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் நெடுந்தூர ஓட்டப்போட்டி தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது.

அன்னை சத்யா விளையாட்டரங்கிலிருந்து தொடங்கி முனிசிபல் காலனி, மருத்துவக்கல்லூரி முதல் கேட் மற்றும் தென்னக பண்பாட்டு மையம் வரை சென்றடைந்து மீண்டும் அன்னை சத்யா விளையாட்டரங்கம் வரை நடைபெற்றது. இப்போட்டியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம் காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். கவுன்சிலர் திருநீலகண்டன், தமிழ்நாடு சாம்போ கழகம் மாநில செயலாளர் டாக்டர் முகம்மது ஆனஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுத்தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும் 4 முதல் 10-ம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.58,000 பரிசுத்தொகை காசோலையாகவும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இப்போட்டியில், 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் 142 நபர்களும், பெண்கள் 135 நபர்களும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 90 நபர்களும், பெண்கள் 35 நபர்களும், மொத்தம் 403 நபர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், மாவட்ட விளையாட்டு பயிற்றுநர்களும், உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியைகளும், பெற்றோர்களும், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சாவூர் மாவட்ட கூடைப்பந்து பயிற்றுநர் பாபு நன்றி கூறினார்.

The post தஞ்சாவூரில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டி appeared first on Dinakaran.

Tags : Arinagar ,Anna ,Thanjavur ,District Collector ,Deepakjekab ,Arian ,Anna Nedunthura ,Arian Anna Nedunthura ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையை ஒட்டி நாளை (ஏப்.30)...