×

உடலுறுப்பு தானம் செய்பவர்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வழிகாட்டி நெறிமுறைகள்: அரசாணை வெளியீடு

சென்னை: மூளைச்சாவு அடையும் நபர்களின் உடலுறுப்புகளை தானம் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த செப்.23ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் உடலுறுப்பு தானம் செய்யும் நபர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் பின்வருமாறு:

* அரசு மருத்துவமனையை பொறுத்தவரை மருத்துவமனையின் முதல்வர் அல்லது மருத்துவ கண்காணிப்பாளர் அல்லது தலைமை மருத்துவ அதிகாரி மூலமாகவும், தனியார் மருத்துவமனையை பொறுத்தவரை மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார இணை இயக்குநர் மூலமாகவும் மாவட்ட ஆட்சியரிடம் நன்கொடை தரும் நபரின் விவரங்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

* நன்கொடையாளரிடம் இருந்து உடல் உறுப்புகள் மீட்கப்பட்ட பின்பு, இறந்தவரின் உடலுக்கு அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும். மாவட்ட ஆட்சியர்கள் வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் போது அவருக்கு மாற்றாக மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வருவாய்), ஆர்.டி.ஓ, துணை ஆட்சியர், வருவாய் பிரிவு அலுவலரால் மரியாதை செலுத்தப்படும்.

* இறந்த நன்கொடையாளர் இல்லத்தில் இறுதி சடங்குகள் செய்யப்படும் போது, அவரின் உடலுக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தப்படும்.

* மூளைச்சாவு அடைந்து நன்கொடை செய்யும் நபரை கவுரவிக்கும் வகையில் அவரது புகைப்படம் மற்றும் செய்தியை மாவட்ட நிர்வாகம் தரப்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு அவரது குடும்பத்தினரையும் கவுரவப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உடலுறுப்பு தானம் செய்பவர்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வழிகாட்டி நெறிமுறைகள்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…