×

குடும்ப ஓய்வூதியம் கேட்டு 36 ஆண்டாக ஏழை பெண் போராட்டம் அதிகாரிகளின் மேல்முறையீடு செயல் மனிதத்தன்மையற்றது: உயர் நீதிமன்றம் கண்டிப்பு

சென்னை: மாம்பலம்-கிண்டி தாலுகா தாசில்தார் அலுவலகத்தில் தலையாரியாக பணியாற்றிய டி.எஸ்.பெருமாள் 1987ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி பணியில் இருந்தபோது மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மனைவி டி.வி.எஸ்.ஜெயா குடும்ப ஓய்வூதியம் வழங்க கோரி அரசுக்கு விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை பரிசீக்கும்படி சைதாப்பேட்டை சப்-கலெக்டர் 1987 டிசம்பர் 8ம் தேதியும், குடும்ப ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளை அனுப்பும்படி மாவட்ட கலெக்டர் 1989 ஏப்ரல் 3ம் தேதியும் மாம்பலம்-கிண்டி தாசில்தாரருக்கு உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், ஜெயாவுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

இதையடுத்து, 2004ல் ஜெயா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் 13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. கடந்த 2017ல் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயாவுக்கு குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்குமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்கள், சைதாப்பேட்டை தாசில்தாரர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்த போது வழக்கு தொடர்ந்த ஜெயா மரணம் அடைந்தார்.

இதையடுத்து அவரது 60 வயது மகன் நதீஷ் பாபு எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலையாரி பெருமாள் இறந்து 36 ஆண்டுகள் கடந்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு 13 ஆண்டுகளுக்கு பிறகும், ஓய்வூதிய பலன்களை பெறாமலேயே மனுதாரரான ஏழை பெண் மரணமடைந்து விட்டார். இதுபோன்ற நிலை எவருக்கும் வரக்கூடாது.

இதற்கு கடமை செய்யத் தவறிய அதிகாரிகளே காரணம். சொற்ப தொகையே குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டிய நிலையில், அதை எதிர்த்து மேல் முறையீடு செய்த அரசின் செயல் மனிதத்தன்மையற்றது. 36 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இதற்கு எந்த அதிகாரி காரணம் என்று பொறுப்பாக்க முடியாது. இந்த வழக்கை ஒரு முன் மாதிரியாகக் கொண்டு, குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கான நடைமுறைகளை முறைப்படுத்த வேண்டும். ஆறு மாதங்களில் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்குவது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

இந்த மேல் முறையீட்டு வழக்கை 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற போதும், அதை எதிர்த்து மேல் முறையீடு செல்லக் கூடும், குடும்ப ஓய்வூதியம் கிடைக்க தாமதமாகும் என்பதால் அதை இந்த நீதிமன்றம் தவிர்க்கிறது. அரசு தரப்பின் இந்த மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. எட்டு வாரங்களில் நதீஷ்பாபுக்கு குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை அரசு வழங்க உத்தரவிட்டனர்.

The post குடும்ப ஓய்வூதியம் கேட்டு 36 ஆண்டாக ஏழை பெண் போராட்டம் அதிகாரிகளின் மேல்முறையீடு செயல் மனிதத்தன்மையற்றது: உயர் நீதிமன்றம் கண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,D.S.Perumal ,Mambalam-Kindi taluk tahsildar ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்