×

இலங்கை கடல் கொள்ளையர் அத்துமீறலை தடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்களின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடல் கொள்ளையர்கள் அவர்களை கடுமையாக தாக்கி மீன்பிடி வலைகள் மற்றும் கருவிகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல.

இலங்கை அரசை கடுமையாக எச்சரிப்பதன் மூலமாகவோ, அல்லது நேரடி நடவடிக்கை மூலமாகவோ, கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்திற்கு முடிவு கட்ட வேண்டும். இதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கிடப்பில் போடுவது, ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதுவது ஆகியவற்றுடன் கடமை முடிந்து விட்டதாக தமிழக அரசு நினைக்கக் கூடாது. பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இலங்கை கடற்கொள்ளையர்களை இண்டர்போல் எனப்படும் பன்னாட்டு காவல்துறை உதவியுடன் கைது செய்து தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post இலங்கை கடல் கொள்ளையர் அத்துமீறலை தடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Ramadoss ,CHENNAI ,CCP ,Tamil Nadu ,Ramadas… ,Ramadas ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...