×

ஊட்டியில் பழங்கால கார்கள் அணிவகுப்பு

ஊட்டி: மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் சார்பில் ஊட்டியில் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடந்தது. இதனை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் சார்பில் சென்னையில் இருந்து 35 பழங்கால கார்கள், ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த கார்கள், ஊட்டியில் உள்ள சிம்சன் நிறுவன மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இத்துடன் ஊட்டியில் உள்ள 10 பழங்கால கார்களும் இடம்பெற்றன. அதன்பின், இந்த கார்களின் அணி வகுப்பு நடந்தது. முன்னாள் டிஜிபி விஜயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த கார்கள் ஊட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் சிம்சன் நிறுவன மைதானத்திற்கு வந்து சேர்ந்தன. பழமை வாய்ந்த அம்பாசிடர், ஜாக்குவார், செவர்லெட், கிளிமத், எம்ஜி, பியட் மற்றும் போர்டு உட்பட பல்வேறு கார்களை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர். தொடர்ந்து, மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் செயலாளர் எம்.எஸ்.குகன் கூறியதாவது: கிராண்ட் ஹெரிடேஜ் கார் டிரைவ் 2023 மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப், சென்னையில் உள்ள முதன்மையான விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் மற்றும் பைக் கிளப் ஆகும். இது கடந்த 21 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

பழங்கால மற்றும் கிளாசிக் வாகனங்களை பாதுகாத்தல், மறுசீரமைத்தல் மற்றும் காட்சிப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்டோபர் 5ம் தேதி சென்னையில் இந்த கார்களின் அணிவகுப்பு துவங்கியது. 9ம் தேதி வரை (நாளை) இந்த கார்களின் அணிவகுப்பு நடக்கிறது. இந்த பயணம், பெங்களூருவை சேர்ந்த கர்நாடக விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கிளப்பின் (கேவிசிசிசி) உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது. ஊட்டியில், நீலகிரி பழங்கால மற்றும் கிளாசிக் கார்கள் சங்கத்துடன் (NIVICCA) இணைந்து இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. 8ம் தேதியும் (இன்றும்) பொதுமக்கள் பார்வைக்காக இந்த கார்கள் ஊட்டியில் நிறுத்தப்பட்டிருக்கும். தொடர்ந்து, 9ம் தேதி (நாளை) புறப்பட்டு சென்னை மற்றும் பெங்களூருக்கு திரும்பும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post ஊட்டியில் பழங்கால கார்கள் அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : Vintage cars parade ,Ooty ,Madras Heritage Motor Club ,Antique Cars Parade in Ooty ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...