×

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் 2023-24ம் ஆண்டில் 234 சட்டமன்ற தொகுதியில் 788 பணிகள் ரூ.11,239 கோடியில் செயல்படுத்த முடிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

சென்னை: ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 2023-24ம் ஆண்டில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 788 பணிகளை ரூ.11,239 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 7.5.2022 அன்று, சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தினை அறிவித்தார். இதுகுறித்து முதல்வர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 22.8.2022 அன்று எழுதிய கடிதத்தில், தொகுதிகளில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட செயலாக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை 28.9.2022 அன்று வெளியிடப்பட்டது.  அதன்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான குழு சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்து 1896 பணிகளை அரசுக்கு பரிந்துரை செய்தது. பரிந்துரைக்கப்பட்ட பணிகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அனைத்து துறைகளிடம் இருந்தும் இதுதொடர்பான விரிவான அறிக்கைகள் பெறப்பட்டன.

அதன்படி, நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் இணைத்து செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், 2023-24ம் ஆண்டில் செயல்படுத்த எடுத்துக்கொள்ளும் பணிகள் என வகைப்படுத்தப்பட்டு அப்பணிகளுக்கு 8.9.2023 அன்று அரசு தலைமை செயலாளர் தலைமையிலான பணிகளை தேர்வு செய்யும் குழு ஒப்புதல் அளித்தது.  இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் அனுமதி வழங்கிடும் உயர்நிலை குழு கூட்டம் நடந்தது.

அப்போது, இத்திட்டத்தின் கீழ், 2023-24ம் ஆண்டில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 788 பணிகள் ரூ.11,239 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், 2024-25ம் ஆண்டில் 203 பணிகள் ரூ.5,901 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வளர்ச்சி ஆணையர் முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை செயலாளர் கோபால், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் 2023-24ம் ஆண்டில் 234 சட்டமன்ற தொகுதியில் 788 பணிகள் ரூ.11,239 கோடியில் செயல்படுத்த முடிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Stalin ,Dinakaraan ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...