×

5000 ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்: எல்லை நகர்களில் புகுந்தனர் ஹமாஸ் தீவிரவாதிகள்,பதிலடி தாக்குதலில் பற்றி எரிகிறது காசா,300 பேர் பலி பலர் படுகாயம்

ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆளும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது எதிர்பாராத பயங்கர தாக்குதலை நடத்தியது. 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டை ஏவிய ஹமாஸ், வான்வழி, தரைவழி மற்றும் கடல் மார்க்கமாக இஸ்ரேல் நாட்டிற்குள் ஊடுருவி பொது இடங்களில் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 100 பேர் பலியாகி உள்ளனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பின் மீது போரை பிரகடனப்படுத்தி உள்ளார். காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 198 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக பிரச்னை நிலவி வருகிறது. இதில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹமாஸ் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த அமைப்பு, காசா முனைப் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, இஸ்ரேல் எல்லையில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் பின்புலத்துடன் செயல்படும் ஹமாஸ் ஆதரவாளர்கள் சமீபத்தில் இஸ்ரேல் எல்லையில் வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தம் மூலம் கடந்த மாத இறுதியில் ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. இந்தநிலையில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் மீது நேற்று காலை எதிர்பாராத பயங்கர தாக்குதலை அரங்கேற்றியது. காசா முனையிலிருந்து 80 கிமீ தொலைவில் உள்ள தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து ஆயிரக்கணக்கான ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

இதனால் சைரன் எச்சரிக்கைகள் தொடர்ந்து ஒலித்தபடி இருந்தன. இஸ்ரேல் தனது ஐயன் டோம் இடைமறிப்பு ஆயுதம் மூலம் பல ராக்கெட்களை நடுவானிலேயே தாக்கி அழித்தாலும், ஏராளமானவை குடியிருப்பு பகுதிகளில் வெடித்து சிதறின. சுமார் 20 நிமிடத்தில் 2,500க்கும் மேற்பட்ட ராக்கெட்கள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் அரசு கூறிய நிலையில், 5,000 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு கூறி உள்ளது. இதுமட்டுமின்றி, இஸ்ரேல் எல்லையில் வேலிகளை உடைத்த ஹமாஸ் தீவிரவாதிகள் சாலை மார்க்கமாகவும், பாரா கிளைடர் மூலம் வான் வழியாகவும், கடல் மார்க்கவும் இஸ்ரேலின் எல்லை நகரங்களுக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தினர். பொதுமக்களை கண்மூடித்தனமான சுட்டனர்.

இதனால் இஸ்ரேல் நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக ராணுவம் களமிறங்கி, ஊடுருவிய தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 100 பேர் பலியானதாக இஸ்ரேல் தேசிய மீட்புப்படை தெரிவித்துள்ளது. 800 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 150 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். ராணுவ உயர் அதிகாரிகளுடனும், அமைச்சரவையை கூட்டியும் பேசிய பிறகு அவர் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரை பிரகடனப்படுத்தினார்.

நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், ‘‘எங்கள் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக எதிரிகள் இதுவரை இல்லாத விலையை கொடுக்க வேண்டியிருக்கும். முதலில் உள்நாட்டில் ஊடுருவிய தீவிரவாதிகள் அழிக்கப்படுவார்கள். அதைத் தொடர்ந்து எதிரிகள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்’’ என்றார். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் அளித்த பேட்டியில், ‘‘ஹமாஸ் மிகப்பெரிய தவறு செய்து விட்டது. இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெறும்’’ என்றார். அதே சமயம், இஸ்ரேல் விமானப்படை காசா முனையில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது.

காசாவின் பல பகுதிகளிலும் குண்டுகள் வீசப்பட்டன. ஹமாஸ் அமைப்பினரின் வாகனங்கள் குறிவைத்து குண்டு வீசி அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் காசாவில் 198 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,610 பேர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தீவிரவாதிகளா, பொதுமக்களா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதே சமயம், இஸ்ரேலில் ஊடுருவிய தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் பல மணி நேர சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

‘இன்று இரவுக்குள் இஸ்ரேலுக்குள் எந்த தீவிரவாதியும் உயிருடன் இருக்க மாட்டான்’ என இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் ஹெட்ச் கூறி உள்ளார்.  போரைத் தொடர்ந்து இஸ்ரேல், பாலஸ்தீனம் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.  இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

*50 ஆண்டுகளுக்குப் பிறகு
அக்டோபர் 6ம் தேதி யூதர்களின் நாட்காட்டி படி, யோம் கிப்பூர் எனும் புனித நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அன்று யூதர்கள் விரதம் இருந்து, முந்தைய ஆண்டில் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பார்கள். கடந்த 1973ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி யூதர்கள் புனித நாளில் எகிப்து, சிரியா தலைமையிலான அரபு படை இஸ்ரேல் மீது எதிர்பாராத தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் கைப்பற்றிய 2 பகுதிகளை மீட்க எகிப்து படைகள் முயன்றன. 6 நாட்களுக்கு இந்த போர் நடந்தது. தற்போது 50 ஆண்டுகளுக்குப்பிறகு இதே போன்ற எதிர்பாராத தாக்குதலை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு நடத்தி உள்ளது.

* ஆபரேஷன் அல் அக்சா
ஹமாஸ் தலைவரான இஸ்மாயில் ஹனியே அளித்த பேட்டியில், ‘‘‘ஆபரேஷன் அல் அக்சா புயல்’ வீசத் தொடங்கி உள்ளது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதியையும், இஸ்ரேலால் பிடிபட்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீன கைதிகளையும் மீட்பதற்காக பாலஸ்தீன போராளிகள் இந்த வரலாற்று சிறப்புமிக்க வீர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார். ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதி இஸ்லாமியர்களின் 3வது புனித தலமாகும். இது யூதர்களுக்கும் புனித இடமாக இருப்பதால் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

* பிணைக்கைதியாக பிடித்து சித்ரவதை
இஸ்ரேல் நகரங்களில் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள், ராணுவத்தின் வாகனங்களை கைப்பற்றி அவற்றை சாலையில் ஓட்டிச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. மேலும் எல்லை வேலிக்கு அருகே இஸ்ரேல் ராணுவ பீரங்கியை கைப்பற்றிய ஹமாஸ் ஆதரவாளர்கள் அதை எரித்து கொண்டாடினர். ராணுவ வீரர் ஒருவரையும் ஒரு கும்பல் கொலை செய்தது. மேலும் இஸ்ரேல் நகருக்குள் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகள் 3 நபர்களை பிணைக்கைதிகளாக பிடித்து சித்ரவதை செய்யும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன. சாதாரண உடையில் இருக்கும் அவர்கள் இஸ்ரேல் ராணுவம் என ஹமாஸ் கூறினாலும் உறுதி செய்யப்படவில்லை.

* பாலஸ்தீனர்கள் கொண்டாட்டம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தை பாலஸ்தீனர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். கைப்பற்றப்பட்ட இஸ்ரேல் பீரங்கி முன்பாக நின்று பலரும் செல்பி எடுத்துக் கொண்டனர். புல்டோசர் மூலமாக எல்லை வேலிகளை சிலர் தகர்த்தெறிந்தனர். மேலும், டிரக் ஒன்றில் நிர்வாண நிலையில் இஸ்ரேல் பெண் ஒருவரின் உடலை கொண்டாட்டத்துடன் கொண்டு செல்வது போன்ற பயங்கர வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. நிலைமை எல்லை மீறி விட்டதால், காசாவை ஒட்டி உள்ள தெற்கு இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் சாலைகளை இஸ்ரேல் ராணுவப்படை மூடி உள்ளது.

*இந்தியர்களுக்கு எச்சரிக்கை
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் 18,000 இந்தியர்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. அதே சமயம், போரைத் தொடர்ந்து இஸ்ரேலில் பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. விமான சேவை முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

*இஸ்ரேலுக்கு மோடி ஆதரவு
ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, ‘இது தீவிரவாத தாக்குதல்’ என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்து, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது கண்டன பதிவில், ‘‘இஸ்ரேலில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் பற்றிய செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். இதில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேலுடன் ஒற்றுமையாக துணை நிற்கிறோம்’’ என கூறி உள்ளார்.

The post 5000 ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்: எல்லை நகர்களில் புகுந்தனர் ஹமாஸ் தீவிரவாதிகள்,பதிலடி தாக்குதலில் பற்றி எரிகிறது காசா,300 பேர் பலி பலர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Israel ,Hamas ,Gaza ,Jerusalem ,Gaza Strip ,Palestine ,
× RELATED இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 29000 பாலஸ்தீனியர்கள் பலி