×

இந்த வார விசேஷங்கள்

அவிதவா நவமி
7.10.2023 – சனி

மஹாளய பட்சத்தில் முன்னோர் வழிபாடு அவசியம். மஹாளய பட்சம் முழுமையாக 15 நாட்களும் விரதம் இருக்க மிகச் சிறந்த பலன்கள் உண்டு. முன்னோர்களை வழிபடுவது குடும்ப விருத்திக்கு நல்லது. ஆயினும் குறிப்பிட்ட சில நாட்கள் தனிச் சிறப்புடன் சிறப்பு பலன்களைத் தரும். அதில் மகாளயபட்ச நவமிக்கு அவிதவா நவமி என்று பெயர். சுமங்கலிகளுக்காக இந்த நாள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நாளில், குடும்பத்தில் சுமங்கலியாக காலமான பெண்களை நினைவுகூர்ந்து, இந்தநாளில் அவர்களுக்குரிய கர்ம காரியங்களைச் செய்ய வேண்டும். அது சுமங்கலிகளின் பரிபூர்ண ஆசியைப் பெற்றுத்தரும்.

மனைவியானவள், சுமங்கலியாக இறந்துவிட்டாலும்கூட, அவளின் கணவர் செய்யும் எல்லாக் காரியங்களிலும் அவளை இருத்தியே, முன்னிலைப்படுத்தியே எல்லாம் செய்வதாகச் சொல்கிறார்கள். அப்போது ‘அவிதவா’ என்று சாஸ்திரம் அழைக்கிறது. மேலும், இந்த நாட்களில் வறியவர்களுக்கு வஸ்தரதானம் செய்வது, மிகுந்த ஆசீர்வாதத்தையும், பித்ருக்களுக்கு நற்கதியையும் அளிக்கும் என்பதால், இயன்றளவு தானம் செய்து பித்ருக்களின் ஆசிகளைப் பெறலாம். வழக்கம் போல், பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும். மேலும், சுமங்கலிப் பெண்கள் எவருக்கேனும் புடவை ஜாக்கெட் வழங்குங்கள்.

புரட்டாசி 3-வது சனிக்கிழமை 7.10.2023 – சனி

புரட்டாசி மாதம் முழுக்கவே பெருமாளுக்கு, அதுவும் திருவேங்கடமுடையானுக்கு உரியது. ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தளிகை போட்டு, மாவிளக்கு ஏற்றி வழிபடும் வழக்கம் உண்டு. சிலர் பாதயாத்திரையாக திருமலைக்குச் செல்வதும் உண்டு. இப்பொழுது பாதயாத்திரை இல்லாவிட்டாலும், நிறைய பேர் புரட்டாசி மாதம் முழுக்க திருமலைக்குச் சென்று திருவேங்கடவனை தரிசித்து வருவதில் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.

திருப்பதிக்குச் சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேரும் அல்லவா. சனிக்கிழமை பெருமாளை வழிபாடு செய்ய காரியத் தடைகள் விலகும். காரியம் சித்தி தரும். அதுவும் சனிக்கிழமை ஸ்திரவாரம். நற்பலன்கள் குறைவின்றி நீடித்து இருக்க சனிக்கிழமை, அதுவும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை வழிபாடு செய்வது அவசியம். தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் உற்சாகத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டு வரும் நாள் இது.

ராகு – கேது பெயர்ச்சி 8.10.2023 – ஞாயிறு

நவக்கிரகங்கள் ஒன்பது. இதில் ஏழு கிரகங்களில் சூரியனும் சந்திரனும் ஒளி உள்ளவை. சில ஒளி இல்லாதவை. ஒளி இல்லாத கிரகங்கள் ஆயினும் சூரியனின் கதிர்களாலும் சூரியனின் கதிர்களைப் பெற்ற சுக்கிரன் குரு போன்ற கிரகங்களாலும் ஒளியைப் பெற்று சுபத்தன்மை அடையும் கிரகங்கள் உண்டு. ஆனால், சூரியனையும் சந்திரனையும் ஒளிமங்கச் செய்யும் நிழல் கிரகங்கள் இரண்டு உண்டு.

அவை ஒரே கிரகத்தின் இரண்டு பாகங்கள். ஒன்று ராகு. மற்றொன்று கேது. இவை இயற்கை வக்கிர கதி கிரகங்கள். தனி வீடுகள் இல்லாத இந்தக் கிரகங்கள், தாங்கள் இருக்கும் வீடுகளின் பலன்களையும், தங்களோடு சேர்ந்த கிரகங்களின் பலன்களையும் ஆகர்ஷணம் செய்து பலன் அளிக்கும் வல்லமை பெற்றவை. இதனை சர்ப்ப கிரகங்கள் என்பார்கள். இந்த சர்ப்ப கிரகங்களின் இடையில் மற்ற கிரகங்கள் அமைந்துவிட்டால் அதனை `கால சர்ப்ப தோஷம்’ அல்லது `யோகம்’ என்பார்கள்.

18 மாதங்களுக்கு ஒரு முறை இடம் பெயரும் இந்தக் கிரகங்களின் பெயர்ச்சி இன்று (8.10.2023) ஞாயிற்றுக்கிழமை தட்சிணாயணப் புண்ணிய கால, வருஷருதுவில், கிருஷ்ணபட்சத்து தசமி திதி, பூசம் நட்சத்திரம், சித்தம் நாமயோகம், வணிசை நாமகரணம் சித்த யோகத்தில், பஞ்சபட்சியில் ஆந்தை நடைபயிலும் நேரத்தில் பிற்பகல் 3 மணி 36 நிமிடத்துக்கு ராகு, தான் இருந்த மேஷ ராசியில் இருந்து, மீன ராசிக்கு வருகின்றார்.

கேது, தான் இருந்த துலாம் ராசியில் இருந்து, கால புருஷனுக்கு ஆறாம் ராசியான கன்னி ராசிக்கு வருகின்றார். ராகுவுக்கு இடம் தந்த குரு வலிமையுடன் இருப்பதால் ராகுவின் பாதிப்பு குறையும். அதுபோல் ராகுவின் எதிர் ராசியான கன்னி ராசியும் புதனின் சுபத்தன்மையை பொறுத்து கெடுதலன்களைக் குறைத்துக் கொள்ளும். இந்த ராகு – கேது பெயர்ச்சி முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் சர்ப்ப சாந்தி பரிகாரங்களும் செய்து கொள்வது நல்லது.

குறைந்தது அம்மன் கோயில்களில் உள்ள நாகப் பிரதிஷ்டைகளை வணங்கி வாருங்கள் எண்ணங்களை தூய்மையாக ஆக்கப்பூர்வமாகவும் கொண்டவர்களுக்கும், பிறர் நலன்களில் அக்கறை உள்ளவர்களுக்கும், அதிகமான தெய்வ நம்பிக்கை உள்ளவர்களுக்கும் ராகு – கேது தோஷம் பெரும் பாதிப்பு செய்வதில்லை. மாறாக அவர்கள் தன்னம்பிக்கை துணிச்சலை வளர்க்கும். திட்டங்களை வெற்றி பெறச் செய்யும்.

அஜா ஏகாதசி
10.10.2023 – செவ்வாய்

அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி. அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி மகாபாரதத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ணர் உபதேசம் செய்ததாக வருகிறது. புரட்டாசி ஏகாதசி அன்று எவரொருவர் உபவாசம் இருந்தாலும் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர். ஏகாதசி நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, பகவான் விஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணா நோன்பு இருப்பது நல்லது.

சர்க்கரை நோய் போன்ற நோய் உள்ளவர்கள் சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கும் போது நீர் குடிக்கலாம். நாள் முழுவதும் பகவான் நாமத்தை ஜபிக்கலாம். அவரவர் இல்லங்களிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கேற்றி, துளசியை சாற்றி வழிபடலாம். அன்று பகவான் ஸ்ரீஹரி பூஜை செய்வதன் மூலம் `அஸ்வமேத யாகம்’ செய்த புண்ணியம் பெறுகிறார்கள். இன்று சொல்ல வேண்டிய பாசுரம்.

சோர்வினால் பொருள் வைத்தது
உண்டாகில்
சொல்லு சொல்லு என்றுசுற்றும்இருந்து
ஆர்வினவிலும் வாய் திறவாதே
அந்தகாலம் அடைவதன்முன்னம்
மார்வம்என்பதுஓர் கோயில்அமைத்து
மாதவன்என்னும் தெய்வத்தைநாட்டி
ஆர்வம்என்பதுஓர் பூஇடவல்லார்க்கு
அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.

அருணந்தி சிவாச்சாரியார் குரு பூஜை
11.10.2023 – புதன்

சகலாகம பண்டிதர் திருத்துறையூரில் அவதரித்தவர். அச்சுதகளப்பாளரின் வம்சாவளிக்கு குலகுருவாக இருந்தவர். மெய்கண்டாருக்கு குல குரு. ஆனால் பரஞ்சோதியாரிடம் பெற்ற ஞானத்தின் பயனாக, மெய் கண்டார் சிறந்த ஞானியாகி அனைவருக்கும் சிவஞான போதனைகளை எடுத்துரைத்து வந்தார். இதுபற்றி அறிந்தவர் சின்னஞ்சிறுவனான மெய்கண்டாரின் மீது பொறாமை கொண்டார்.

மேலும் தன்னுடைய வழி காட்டுதலில் பிறந்த பிள்ளை, தன்னை வந்து சந்திக்காததை நினைத்து கோபம் கொண்டார். இதனால் தன்னுடைய சீடர்களில் ஒவ்வொருவராக அனுப்பி, திருவெண்ணெய்நல்லூரில் நடப்பதை அறிந்துவரச் செய்தார். ஆனால் சென்றவர்கள் யாருமே திரும்பிவரவில்லை. காரணம், அவர்கள் அனைவருமே மெய்கண்டாரின் உபதேசத்தில் மயங்கி, அவரிடமே சீடராக சேர்ந்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சகலாகம பண்டிதர், தானே நேரடியாக சென்று மெய்கண்டாரை சந்தித்தார்.

அவர் வந்த நேரத்தில் தன்னுடைய சீடர்களுக்கு ஆணவம் (அறியாமை) பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார், மெய்கண்டார். அதை நிதானத்துடன் கேட்ட சகலாகம பண்டிதர், “ஆணவத்துக்கு ஒரு வடிவை காட்ட இயலுமா?” என்று கேட்டார். அதற்கு மெய்கண்டார், “28 ஆகமங்களும் கற்றுதேர்ந்தும், ஆணவத்திற்கு வடிவம் இல்லை என்ற உண்மையை உணராத நீங்கள்தான் ஆணவத்தின் வடிவம்” என்று பதிலுரைத்தார்.

மேலும் அவரை தலை முதல் கால் வரை பார்த்தார். அந்த ஞானப் பார்வையில், சகலாகம பண்டிதரின் அறியாமை நீங்கிய இவரே என்னை ஆட்கொள்ள வந்த குரு’ என்று உணர்ந்த சகலாகம பண்டிதர், மெய்கண்டாரின் பாதம் பணிந்து தம்மை சீடராக ஏற்கும்படி வேண்டினார். மெய்கண்டாரும், சகலாகம பண்டிதருக்கு திருநீறு இட்டு, ‘அருள்நந்தி சிவம்’ என்னும் பெயரிட்டு தன்னுடைய தலைமைச் சீடராக ஏற்றுக்கொண்டார்.

இந்த ‘அருள்நந்தி சிவம்’ என்பதே ‘அருணந்தி சிவாச்சாரியார்’ என்றானது. அருணந்தி சிவாச்சாரியார் அருளிய இரண்டு நூல்களில் சிறந்ததாக அறியப்படுவது, ‘சிவஞான சித்தியார்’. இந்த மகான், புரட்டாசி மாதம் பூரம் நட்சத்திர நாளில் முக்தி அடைந்தார். இவருக்கு திருத்துறையூரில் திருக்கோயில் இருக்கிறது.

போதேந்திராள் மஹா ஆராதனை
11.10.2023 – புதன்

குருவின் ஆணைப்படி நாமசங்கீர்த்தனத்தில் மகிமையைப் பரப்பும் கைங்கர்யத்தைத் தன் வாழ்வாகக் கொண்டார் போதேந்திராள். சாதி பேதமின்றி அனைவரையும் நாம ஜபம் செய்யுமாறு வலியுறுத்தினார். கலியுகத்தில் முக்திக்கான எளிய சாதனமாக நாம ஜபத்தை முன்வைத்தார். சமகாலத்தவரான தர அய்யாவாளோடு இணைந்து, நாமஜபத்தின் மகிமையை எடுத்துக்கூறி, பல அற்புதங்களைச் செய்து மக்களை ஈர்த்தார்.

காவிரிக் கரையில் சிறுவர்களோடு விளையாடும் வழக்கம் கொண்ட போதேந்திராள் ஒருநாள், விளையாட்டு போல ஒரு குழியில் இறங்கி அமர்ந்துகொண்டு, தன்மேல் மணலைப் போட்டு மூடிவிடும்படி கூறினார். சிறுவர்களும் அவ்வாறே செய்தனர். மறுநாள், விவரம் அறிந்து மக்கள் அவரைத் தேடியபோது, அசரீரி வாக்காக ஒலித்த சுவாமிகள், `தான், ஜீவன் முக்தராகி நித்திய ஜபத்தில் இங்கு அமர்ந்திருக்கிறேன்’ என்று கூறியருளினார்.

சுவாமிகள் முக்தியடைந்த நாள் 1692-ஆம் ஆண்டு, புரட்டாசி மாதம் பௌர்ணமி திதி. இன்றும் கோவிந்தபுரத்தில் அமைந்திருக்கும் போதேந்திராள் சந்நதியில், 29.9.2023 முதல் 12.10.2023 வரை சுவாமிகளின் ஆராதனை வைபவம் நாமசங்கீர்த்தனத்தோடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று மஹா ஆராதனை நடைபெறும்.

பிரதோஷம்
12.10.2023- வியாழன்

திரயோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷகாலம். ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. புரட்டாசி பிரதோஷம் அதிக சிறப்புடையது அதுவும் இந்த பிரதோஷம் ஞான குருவான தட்சிணா மூர்த்திக்கு உரிய வியாழக்கிழமை வருகின்றது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதமாக இருப்பதால் இந்த பிரதோஷ வேளையில் சிவன் கோயில்களை வணங்குவது போலவே, பெருமாளின் கோயில்களில் லட்சுமி நரசிம்மப் பெருமாளை வணங்குவது சிறப்பான பலன்களைத் தரும். சக்கரத்தாழ்வாரையும் வணங்கலாம்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Avidava Navami ,Mahalaya ,
× RELATED குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்