×

உலக கோப்பை கிரிக்கெட்; சேப்பாக்கத்தில் நாளை இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்.! அனல் பறக்க போகும் ஆட்டம்

சென்னை: 10 அணிகள் பங்கேற்றுள்ள 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா தனது முதல் போட்டியில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்குகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 3 நாட்களுக்குமுன் இரு அணி வீரர்களும் சென்னை வந்து சேர்ந்த நிலையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். நம்பர் ஒன் அணியான இந்தியா சொந்த மண்ணில் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா என வலுவான வரிசை உள்ளது.

பவுலிங்கில் பும்ரா, சிராஜ் சூப்பர் பார்மில் உள்ளனர். சுழலில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் களம் இறங்குவர். இந்த ஆண்டில் அதிக ரன் அடித்துள்ள கில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஆடுவது பற்றி இன்று மாலைக்கு முடிவு எடுக்கப்படும். அவர் ஆடாவிட்டால் இஷான்கிஷன் தொடக்க வீரராக களம் இறங்குவார். மறுபுறம் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவும் வலுவாக உள்ளது. டேவிட்வார்னர், மிட்செல்மார்ஷ் அதிரடி தொடக்கம் அளிப்பர். மிடில் ஆர்டரில் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே முதுகெலும்பாக உள்ளனர்.

கேமரூன்கிரீன்,மேக்ஸ்வெல் பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் பங்களிப்பர். வேகத்தில் மிட்செல் ஸ்டார்க், கேப்டன் பாட் கம்மின்ஸ் வேகத்திலும்,ஆடம் ஜாம்பா சுழலிலும் இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கலாம். குறிப்பாக ஸ்டார்க்-ரோகித், ஜாம்பா-கோஹ்லி, வார்னர்-அஸ்வின், மேக்ஸ்வெல்-ஜடேஜா ஆகியோரின் மோதல் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. சமபலம் கொண்ட இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்க போராடும் என்பதால் சேப்பாக்கத்தில் நாளை அனல் பறக்கப்போவது உறுதி. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. போட்டிக்கான டிக்கெட் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டதால் மைதானம் நிரம்பி வழியும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்திய உத்தேச அணி:

ரோகித் சர்மா (கேப்டன்),கில் அல்லது இஷான் கிஷான், விராட் கோலி, ஸ்ரேயா ஐயர், கேஎல்.ராகுல் (வி. கீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.

ஆஸ்திரேலிய உத்தேச அணி:

கம்மின்ஸ்(கேப்டன்), வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீபன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(வி.கீ), கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஹேசல்வுட்.

The post உலக கோப்பை கிரிக்கெட்; சேப்பாக்கத்தில் நாளை இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்.! அனல் பறக்க போகும் ஆட்டம் appeared first on Dinakaran.

Tags : World Cup Cricket ,India ,Australia ,Chepak ,CHENNAI ,13th World Cup cricket ,India's… ,Dinakaran ,
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!