×

18க்கும் மேற்பட்ட சந்திப்பு சாலைகள் கொண்ட கேடிசி நகர் 4 வழிச்சாலை பாலத்தின் கீழ் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

நெல்லை : கேடிசி நகர் 4 வழிச்சாலை பாலத்தின் கீழ் பகுதியில் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.நெல்லை – தூத்துக்குடி மாவட்டத்தில் நுழைவாயில் பகுதியில் கேடிசி நகர் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் கீழ் உள்ள 3 ரவுண்டானாக்களின் வழியே சுமார் 18 முக்கிய சாலை இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்பு சாலைகளின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

குறிப்பாக இரவு ேநரங்களில் இந்த சாலைகளின் வழியே தூத்துக்குடியில் இருந்து தென்காசி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு பெரிய கன்டெய்னர் லாரிகள், மரத்தடிகள் ஏற்றி வரும் வண்டிகள், மீன் வண்டிகள், திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள், ஐகிரவுண்ட் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு வரும் வாகனங்கள், கோர்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவு இந்த சாலைகளை பயன்படுத்தி செல்கின்றன.

மேலும் சென்னை- குமரி இடையே செல்லும் வாகனங்களில் வருபவர்கள் உணவுக்காக மேம்பாலத்திற்கு கீழ் சர்வீஸ் ரோடு மூலம் வந்து அப்பகுதியில் உள்ள பல உணவகங்களுக்கு வந்து செல்கின்றனர். இந்த சாலைகளில் பகல் நேரங்களில் போதிய அளவிற்கு போக்குவரத்து சிக்னல்கள் இல்லாமலும் போக்குவரத்து போலீசார் இல்லாமலும் உள்ளதால் அப்பகுதிகளின் வரும் வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக சென்று திரும்பும் நிலை உள்ளது. இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் தங்களது விருப்பம் போல வாகனங்களை ஓட்டி வருவதால் அங்கு அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.

இரவு நேரங்களில் இப்பகுதியில் ஒரே ஒரு ஹைமாஸ் லைட் மட்டுமே உள்ளது. இந்த லைட் மேம்பாலத்திற்கும், இதன் ஒரு பகுதிக்கு மட்டுமே தெரியும் விதமாக உள்ளது.
இதனால் பாலத்தின் கீழ்பகுதிகளுக்கும், அடுத்த பகுதிகளுக்கும் போதிய வெளிச்சம் இல்லை. ேமலும் இருளான பகுதிகளில் சிறிய மின் விளக்குகளும் கூட இல்லை. விபத்து பகுதிகளை அடையாளம் காட்ட அங்கு ரிப்ளக்டர்கள் கூட அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த ரவுண்டானாக்கள் அடங்கிய பகுதிகளுக்கு வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.

எனவே இப்பகுதியில் பகல் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி விபத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் நியமிப்பதுடன் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தானியங்கி சிக்னல்கள் அமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இரவு நேரங்களில் இருளடைந்து கிடக்கும் அப்பகுதியில் தற்போதுள்ள ஹைமாஸ் லைட்டின் எதிர்புறம் மேலும் ஒரு ஹைமாஸ் லைட்டுகள், பாலத்தின் கீழ் 3 ரவுண்டாக்களில் வரும் வாகனங்களுக்காக அங்கும் மின்விளக்குகள் அமைப்பதுடன் தொடரும் விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

The post 18க்கும் மேற்பட்ட சந்திப்பு சாலைகள் கொண்ட கேடிசி நகர் 4 வழிச்சாலை பாலத்தின் கீழ் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : KTC Nagar 4 ,bridge ,KDC Nagar 4 ,
× RELATED பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது