×

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் 3,500 கர்ப்பிணிகளுக்கு சுகாதார பெட்டகம்

* துணை இயக்குனர் தகவல்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 6 மாத காலத்தில் 3,500 கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார பெட்டகம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் ஹேமசந்த் காந்தி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு மூலம் உரிய சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி உதவி தொகை மற்றும் சுகாதார பெட்டகம் போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் 3 தவணைகளாக ரூ.14 ஆயிரம் உதவி தொகையும், 2 தவணைகளாக அரை கிலோ ஆவின் நெய், பேரீச்சை ஒரு கிலோ, சத்து மாவுகள், சத்து டானிக்குகள் அடங்கிய தலா ரூ.2 ஆயிரம் மதிப்புடைய சுகாதார பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் கொடிக்கால்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரப்பெற்ற சுகாதார பெட்டகம் நேற்று சுகாதார ஊழியர்கள் மூலம் இறக்கி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் ஹேமசந்த் காந்தி கூறுகையில், மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரையில் 6 ஆயிரத்து 275 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 6 ஆயிரத்து 653 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம் நடைபெற உள்ள நிலையில் இவர்களை சுகாதாரத் துறை சார்பில் தினந்தோறும் கண்காணித்து அவர்களது செல்போன் எண்ணுக்கு உரிய மருத்துவ அறிவுரைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு மையம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தின் மூலம் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கர்ப்பிணி தாய்மார்களை தினந்தோறும் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை வழங்குவதுடன் ஏதேனும் நோய் இருப்பது அறியப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதற்கும் ஏற்பாடுகளும் செய்யப்படும். மேலும் அரசு மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் தலா ரூ. 2 ஆயிரம் மதிப்புடைய சுகாதார பெட்டகமானது மாவட்டத்திற்கு ஏற்கனவே 3 ஆயிரத்து 500 எண்ணிக்கையில் வரப்பெற்று வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 2வது கட்டமாக ஆயிரத்து 500 எண்ணிக்கையில் வரபெற்றுள்ளது. இவைகள் உடனடியாக கர்ப்பிணி பெண்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஏப்ரல் மாதம் முதல் 6 மாத காலத்தில் இதுவரையில் மாவட்டத்திற்கு 5 ஆயிரம் எண்ணிக்கையில் சுகாதார பெட்டகம் வரபெற்றுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

The post திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் 3,500 கர்ப்பிணிகளுக்கு சுகாதார பெட்டகம் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur district ,Thiruvarur ,Tiruvarur district ,
× RELATED வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு