×

தர்மபுரி அருகே தாமலேரிப்பட்டியில் தென்பெண்ணை ஆற்றில் நீரேற்று நிலையம்

*ஏரி, குளங்களை நிரப்ப அரசுக்கு பரிந்துரை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தாமலேரிப்பட்டி தென்பெண்ணை ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்து 15க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை நிரப்ப அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதி புலம்பெயர் தொழிலாளர்களை அதிகம் கொண்ட பகுதியாக உள்ளது. போதிய தொழிற்சாலைகளோ, வேலைவாய்ப்போ இல்லாத நிலையில் விவசாய கூலிகளாக பெரும்பாலானோர் உள்ளனர்.

வறட்சி காலத்தில் விவசாயம் பாதிக்கப்படும்போது விவசாயிகள் முதல் விவசாய தொழிலாளர்கள் வரை வேலைதேடி வெளி மாவட்டங்களுக்கு செல்வது வாடிக்கையாகி விட்டது. அரூர் நகரையொட்டி 10 கி.மீ., தொலைவில் தமிழகத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணையாறு ஓடிய போதும், எவ்வித பயனும் இல்லை. தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களை பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ள தென்பெண்ணை ஆற்றின் மறுபுறத்தில் பள்ளமான பகுதியில் கிருஷ்ணகிரியும், மேடானப் பகுதியில் தர்மபுரி மாவட்டமும் அமைந்துள்ளது.

இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் கால்வாய்கள் அமைத்து அதன்மூலம் விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். ஆனால், தர்மபுரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தென்பெண்ணை பாசனம் கானல் நீராகவே உள்ளது. அரூர் பகுதியில் உள்ள கிராமங்கள் பயன்பெறும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொட்டம்பட்டி அருகில் அமைந்துள்ள வனப்பகுதியில் மதிகெட்டான் கால்வாய் திட்டம் எனப்படும் செனக்கல் திட்டம் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டது.

நீண்ட நாள் கிடப்பில் இருந்த இத்திட்டத்தை பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் வற்புறுத்தல் காரணமாக கடந்த சில ஆண்டுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, திட்ட செலவு அதிகரிப்பு மற்றும் மேட்டுப்பகுதியாக உள்ளதால் நீர் கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனக்கூறி கைவிரித்து விட்டனர். இந்நிலையில், அதற்கு மாற்றாக மொரப்பூர் ஊராட்சிக்குட்பட்ட தாமலேரிப்பட்டி பகுதியில் தென்பெண்ணை ஆற்றுப்பாலம் அருகில் தடுப்பணை கட்டி அதன் மூலம் மழை காலத்தில் பெருக்கெடுத்தோடும் ஆற்று நீரை நீரேற்றம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தடுப்பணை அமைப்பதற்கான அனைத்து வசதிகளும் அப்பகுதியில் உள்ளது.

இதன்மூலம் கீழ் மொரப்பூர், மருதிப்பட்டி, வெளாம்பட்டி, வேட்ரப்பட்டி, வடுகப்பட்டி, கொங்க வேம்பு, மாம்பட்டி உள்ளிட்ட 10 ஊராட்சிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட ஏரிகள் பாசன வசதி பெறுவதுடன் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயடையும்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வறட்சியிலும் வளமிக்க மண்ணை கொண்டுள்ள அரூர் பகுதியில் விவசாயத்தை காக்க இந்த நீரேற்றுத்திட்டம் மிக அவசியமான ஒன்று. சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியில் காவிரியாற்றில் இருந்து நீரேற்றி 100க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு கொண்டு செல்வதை உதாரணமாக எடுத்துக்கொண்டு தாமலேரிப்பட்டியில் நீரேற்றி 15க்கும் மேற்பட்ட ஏரி-குளங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து வலியுறுத்தப்படும் தொட்டம்பட்டி செனக்கல் கால்வாய் திட்டத்திற்கு மாற்றாக இந்த நீரேற்றத் திட்டம் மூலம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து 10 ஊராட்சிகளைச் சேர்ந்த ஏரிகளில் நீர் நிரப்பலாம். இதன்மூலம் மானாவாரி நிலங்களை நன்செய் நிலமாக்கி, விளைபொருட்கள் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் என அனைவரையும் காத்திட அரசு முன்வரவேண்டும்.

குறிப்பாக வருடத்தில் 6 மாதம் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. மழை காலத்தில் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தாமலேரிப்பட்டியில் நீரேற்று நிலையம் போன்று தடுப்பணை ஏற்படுத்தி ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரூர் அருகே தாமலேரிப்பட்டியில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீரேற்றி 15க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்பிடுவத்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து அறிக்கை தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றனர்.

The post தர்மபுரி அருகே தாமலேரிப்பட்டியில் தென்பெண்ணை ஆற்றில் நீரேற்று நிலையம் appeared first on Dinakaran.

Tags : Hydro station ,South Bengal River ,Tamalaripati ,Dharmapuri ,Thamaleripati River ,Arur ,South Indian River ,Tamaleripati ,Dinakaraan ,
× RELATED நெரிஞ்சிப்பேட்டை கதவணை நீர்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடக்கம்