×

குறுவை மற்றும் சம்பா சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: குறுவை மற்றும் சம்பா சாகுபடியால் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், கிராமப்புற மக்களின் வாழ்வுக்கு ஆதாரமாகவும் விளங்குகின்ற வேளாண் தொழிலை பாதுகாப்பதிலும், விவசாயப் பெருங்குடி மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை அளிப்பதிலும் முனைப்புடன் செயல்பட வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. இந்த ஆண்டு டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

கர்நாடக அரசோ தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலேயே சட்டப் போராட்டத்தை நடத்தாமல், காலந்தாழ்த்தி நடவடிக்கை எடுத்ததன் காரணமாக தமிழ்நாட்டிற்கு உரிய நீர் கிடைக்கவில்லை. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 18,000 கன அடி நீர் திறந்துவிட்டால்தான் வயல்களுக்கு நீர்பாயும் என்ற நிலையில், வெறும் 5,000 கன அடி நீரை திறந்துவிடுவது என்பது எதற்கும் பயனற்றது. இதன்மூலம் ஒருபோக சாகுபடிக்கே உறுதியில்லாத நிலை உருவாகியுள்ளது. குறுவை சாகுபடி மேற்கொண்டவர்கள் மட்டுமல்லாமல் நீண்ட கால சம்பா நெல் விதைப்பு மேற்கொண்டவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது நெற்பயிர் குன்றி, களைகள் ஓங்கி வளர்ந்து, வயல்கள் எல்லாம் புல் காடாக காட்சி அளிக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் வெறும் 610 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருப்பதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இன்றைய நிலவரப்படி கணக்கிட்டால், இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுத்து, அதன் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப, ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்கிட உடனடி உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் முதலமைச்சர் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post குறுவை மற்றும் சம்பா சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : OPS ,Chuwi ,Samba ,O. Panneirselvam ,Chevui ,Dinakaraan ,
× RELATED அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த...