×

அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து: காஞ்சிபுரம் ஆர்.டி.ஒ அதிரடி

காஞ்சிபுரம்: அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி சென்னையில் இருந்து மகாராஷ்டிரா செல்லவிருந்த பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே சாகசத்தில் ஈடுபட முயன்றபோது விபத்தில் சிக்கினார். சாகசம் செய்ய முயன்றபோது சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் டிடிஎஃப் வாசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து டி.டி.எஃப். வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்குபதிவு செய்திருந்தது.

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.டி.டி.எஃப். வாசனின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 16 ஆம் தேதி வரை நீட்டித்து மேலும் 15 நாட்களுக்கு டிடிஎஃப் வாசனை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. யூடியூபரான டி.டி.எஃப் வாசன் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஒட்டி வீடியோ வெளியிட்டுவந்தார். இந்நிலையில் இன்று முதல் 2033 அக்டோபர் 5ம் தேதி வரை டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அச்சுறுத்துவதுபோல் வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து

பிற வாகன ஓட்டிகள், பாதசாரிகளை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். அதிவேகமாக பைக், கார் ஓட்டினால் 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆர்.டி.ஒ. எச்சரிக்கை விடுத்துள்ளார். டிடிஎஃப் வாசனின் செயல்பாடுகளால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஆர்.டி.ஒ தெரிவித்துள்ளது.

டிடிஎஃப் வாசனை போன்று பிற இளம்தலைமுறையினரும் ஆகிவிடக் கூடாது என்பதால் நடவடிக்கை எடுப்பட்டுள்ளது.டி.டி.எஃப். வாசன் மீது காஞ்சி மட்டுமன்றி சென்னையில் 8 வழக்குகளும், கோவை, நீலகிரியில் தலா ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. இமாச்சலப்பிரதேசம் மணாலியிலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக டி.டி.எஃப். வாசன் மீது வழக்கு உள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி கைது செய்யப்பட்ட டி.டி.எஃ.ப். வாசனுக்கு ஜாமின் மறுக்கப்பட்டு தொடர்ந்து சிறையில் உள்ளார்.

The post அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து: காஞ்சிபுரம் ஆர்.டி.ஒ அதிரடி appeared first on Dinakaran.

Tags : TDF Vasan ,Kanchipuram RTO ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் காந்தி சாலை அருகே தேங்கி...