×

பங்குச்சந்தை மோசடி விவகாரம் அதானி குழுமத்துக்கு நற்சான்றிதழ் தர செபிக்கு என்ன அழுத்தம் தரப்பட்டது? காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: அதானி குழுமத்துக்கு நற்சான்றிதழ் தர செபிக்கு என்ன அழுத்தம் தரப்பட்டது? என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. அதானி குழும நிதி கையாளுதல்கள் குறித்து கடந்த 2014ம் ஆண்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் விடுத்திருந்த எச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்(செபி) மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், “அதானி குழுமத்துக்கு நற்பெயர் கொடுக்க செபிக்கு எத்தகைய அழுத்தம் தரப்பட்டது?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அவர் தன் டிவிட்டர் பதிவில், “2014ல் அதானி குழுமம் சந்தை விலைக்கு மாறாக மின் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை அதிக விலைக்கு வாங்கியுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட ரூ.8,320 கோடியை விநோத் அதானியின் கூட்டாளிகளான சாங் சுங்-லிங் மற்றும் நாசர் அலி ஷபான் ஆகியோர் மொரிஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த நிறுவனங்கள் மூலம் கையாண்டுள்ளனர். 2016 ஜுன் 16ம் தேதியில் 8 முதல் 14 சதவீதம் பினாமி சொத்துகள் மொரிஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் உள்ள ஷெல் நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்யப்பட்டன. இதுகுறித்த வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன்? இவை அனைத்தும், 2022ல் அதானி குழுமம் கைப்பற்றிய ஒரு செய்தி ஊடகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்ட யு.கே.சின்ஹா, 2014ல் செபியின் இயக்குநராக பதவி வகித்தபோது தற்செயலாக நடந்ததா? அதானி பங்குச் சந்தை மோசடி குறித்து முழு உண்மையும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மூலம் மட்டுமே வௌிப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பங்குச்சந்தை மோசடி விவகாரம் அதானி குழுமத்துக்கு நற்சான்றிதழ் தர செபிக்கு என்ன அழுத்தம் தரப்பட்டது? காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Chebi ,Athani Group ,Congress ,New Delhi ,Adani Group ,ADANI ,Dinakaraan ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...