×

வறட்சி பாதிப்பு பகுதியில் ஒன்றிய குழு ஆய்வு: விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

பெங்களூரு: பெலகாவி மாவட்டத்தில் ஒன்றிய குழு ஆய்வின்போது விவசாயி ஒருவர் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் 23 சதவீதம் மழை குறைவாக பெய்தது. அதனால் மாநிலத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டது. மழையின்மையால் பயிர்களை காப்பாற்ற முடியாமல் பெரும் இழப்பையும், நஷ்டத்தையும் சந்தித்துள்ள விவசாயிகள், அரசு வழங்கும் நிவாரணத்திற்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மாநில அரசு நியமித்த கேபினட் துணைக்குழுவின் அறிக்கைப்படி, 195 தாலுகாக்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. அதில் 161 தாலுகாக்கள் கடும் வறட்சி பகுதிகளாக அடையாளம் காணப்பட்டன. மாநிலத்தில் ரூ.28,000 கோடி மதிப்பிற்கு பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசிடமிருந்து ரூ.4860 கோடியை மாநில அரசு கேட்டுள்ளது. மாநில வறட்சியை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு, பல துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் 10 பேர் அடங்கிய ஒன்றிய குழுவை கர்நாடகாவிற்கு அனுப்பியுள்ளது. கடந்த 5ம் தேதி பெங்களூருவிற்கு வந்த ஒன்றிய குழுவிடம் முதல்வர் சித்தராமையா மற்றும் கேபினட் துணைக்குழு மாநிலத்தின் வறட்சி சூழல் குறித்து எடுத்துரைத்தது.

அதைத்தொடர்ந்து ஒன்றிய குழுவினர் 3 குழுக்களாக பிரித்து ஆய்வு செய்துவருகின்றனர். நேற்று பெலகாவி மாவட்டம் பைல்கொங்கால் தாலுகாவில் உள்ள கலக்குப்பி என்ற கிராமத்தில் சில விவசாயிகளுடன் ஒன்றிய குழு அதிகாரிகள் வறட்சி பாதிப்பு குறித்து கேட்டறிந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்பாசாகேப் யக்குன்டி என்ற அந்த விவசாயி 40 ஏக்கர் பரப்பில் பயிரிட்ட நிலக்கடலை, சோயாபீன் மற்றும் மற்ற சில பயிர்களை மழையின்மையால் காப்பாற்ற முடியாமல் போனதாகவும், அந்த இழப்பை ஈடுகட்ட முடியாததால் தற்கொலைக்கு முயன்றதாக கூறினார்.

The post வறட்சி பாதிப்பு பகுதியில் ஒன்றிய குழு ஆய்வு: விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Union ,Bengaluru ,Belagavi district ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் பாஜக...