×

வெளியில் தலை காட்டாமல் முடங்கி கிடக்கும் பாஜ எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தி டீரென ரெய்டு நடத்தினால் என்ன செய்வதென்று என ‘கிலி’யில் இலை கட்சி முக்கிய நிர்வாகிகள் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தாமரையுடன் கூட்டணி கிடையாது என இலை தலைமை முறித்துக்கொண்டது. கூட்டணி முறிவு என்பது தொண்டர்களின் முடிவு என சேலத்துக்காரர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால் மன்னர், மனுநீதிசோழன், கடலோரம், மயில் நடனமாடிய உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த இலை கட்சி முக்கிய நிர்வாகிகளுக்கு தாமரையுடன் இருந்து இலை கட்சி விலகியது பிடிக்கவில்லை. அதாவது டெல்லியை பகைத்துக் கொண்டால் கடந்த 10 வருட ஆட்சியில் ‘விட்டமின் ப’ அதிகளவு சம்பாதித்து வைத்துள்ளதை எப்படி காப்பாற்றுவது. திடீரென ரெய்டு நடத்தினால் என்ன செய்வதென்று கிலியில் இருந்து வருகின்றனர். இதுதொடர்பாக ஒரு குரூப் ரகசியமாக டிஸ்கஷன் நடத்தியிருக்காங்க. அப்போது இலை கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள், தேர்தல் தொடர்பாக கூட்டணி அறிவிப்பு வரை தாமரை பற்றியோ, அதன் தலைவர்கள் பற்றியோ எதுவும் பேச வேண்டாம். அதுவரையிலும் அமைதி காப்போம் என ஒரு முடிவுக்கு வந்திருக்காங்க. வெளியில் கசியாமல் ரகசியமாக இருந்து வந்த இந்த தகவல், தாமரை முக்கிய நிர்வாகிகளுக்கு எப்படியோ தெரிய வந்துள்ளது. இந்த தகவல் தாமரை மாநில தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன் பின்னர் தான் டெல்டா மாவட்டத்தில் உள்ள தாமரை கட்சி முக்கிய நிர்வாகிகள், இலை கட்சியில் அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் முயற்சியில் ரகசியமாக களத்தில் இறங்கியுள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வெளியில் தலைகாட்டாமல் முடங்கி கிடக்கும் பாஜ எம்எல்ஏ யாரு’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுவை காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரெயின்போ நகரில் உள்ள ரூ.50 கோடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சார்பதிவாளர் உட்பட 15 பேரை கைது செய்தனர். இதன்பின் மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி, நில அளவைத்துறை இயக்குனர் ரமேஷ் ஆகியோரையும் கைது செய்தனர். போலி பத்திரம் தயாரித்த இடத்தை பாஜ எம்.எல்.ஏ. முழம்குமார் குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட்டு கட்சியினர், பல்வேறு சமூக அமைப்பினர் பலகட்ட போராட்டம் நடத்தினர். காமாட்சி அம்மன் கோயில் நில விவகாரத்தில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன், ரூ.1 கோடி ரூபாயை கோயில் உண்டியலில் போடுவேன் என அறிவிப்பு வெளியிட்டார். கோயில் நிலங்களை இந்து அறநிலையத்துறையிடம் முழம்குமார் எம்எல்ஏ உள்பட அனைவரும் ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் சமீபத்தில் தான் உத்தரவிட்டது. இதையடுத்து புதுவை அரசு, நிலங்களை அளந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில் கோயில் நில விவகாரத்தில் முழம்குமார் எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டை ஐகோர்ட் நிரூபித்து உள்ளது. எனவே அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து ரூ.1 கோடி ரூபாய் கோயில் உண்டியலில் போடுவது எப்போது என அனைத்து கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் முழம்குமார் என்ன செய்வது என தெரியாமல், நொந்து வெளியில் தலை காட்டாமல் இருந்து வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாவட்ட செயலாளர் போல மாநகர செயலாளர் பதவியையும் உருவாக்கணும்னு கேட்கிறாங்களாமே ரத்தத்தின் ரத்தங்கள்’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டுல சமீபத்துல சேலத்து இலை கட்சி விவிஐபி, கட்சி கட்டமைப்புகளை மாற்றியமைச்சார் இல்லையா? அதாவது, கட்சியில நிர்வாக ரீதியா பிரிக்கப்பட்ட மாவட்டங்களை மேலும் பிரித்து 2 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரா மாற்றியிருக்காரு.. திருப்பத்தூர் மாவட்டத்தையும் பிரிச்சு செயலாளர அறிவிக்க போகிறாராம். இது தெரிஞ்சு கொந்தளிக்கிறவர்களிடம் கட்சி வளர்ச்சிக்காகவே இதுபோன்ற நடவடிக்கை எடுத்திருப்பதாக இலை கட்சி சேலத்து விவிஐபி ஆறுதல் கூறியிருக்காராம்… இந்த நிலையிலதான் வெயிலூர்ல திமுகவை போல மாவட்டத்தையும், மாநகரத்தையும் பிரிச்சு மாநகர செயலாளர் பதவியை உருவாக்கணும்னு கோரிக்கை எழுந்திருக்காம்.. ஏற்கனவே இதுபோல ஈரோடு உள்பட பல மாவட்டங்கள்ல மாநகர செயலாளர்கள் பொறுப்பில் உள்ளார்களாம். அதுபோலவே, வெயிலூர் மாவட்டத்திலும் மாநகர செயலாளரை உருவாக்கினால் கட்சியின் வளர்ச்சி அதிகரிக்கும். இதுல சேலத்துக்காரர் உடனடி நடவடிக்கை எடுக்கணும்னு ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்க்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘போனில் ஆள் பிடிக்கும் இலைக்கட்சி தலைவர பத்தி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் தலைவரானதோடு மட்டுமல்லாமல் தூங்கா நகரத்துல மாநாட்டையும் நடத்தி வெற்றிக் களிப்பில் இருந்தாராம் சேலத்துக்காரரு. அதே நேரத்துல கூட்டணியில இருந்துகிக்கிட்டே தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில் பாஜவிடமிருந்து அதிரடியாக வெளியேறிட்டாராம். எப்பவுமே அடிமையாகத்தான் இருப்பாருன்னு நினைச்ச ஒன்றிய பாஜ இதனை சற்றும் எதிர்பார்க்கலையாம். அதே நேரத்துல மாங்கனி மாவட்டத்து கட்சிக்காரங்களும் ஆங்காங்கே மாற்றுக்கட்சிக்கு போயிட்டாங்களாம். இதனால ஒரு வித்தையை ரகசியமாக செயல்படுத்திக்கிட்டிருக்காராம் சேலத்துக்காரரு. எந்தெந்த கட்சியில யார்- யார் அதிருப்தியாவோ, சுணக்கமாகவோ இருக்காங்களோ அவங்களை அலேக்கா தூக்கிக்கிட்டு வாங்க. அவர்களிடம் பேசுவதில் தயக்கமா இருந்தா செல்போன் நம்பரோடு பட்டியலை கொடுங்க. அனைத்தையும் நான் பாத்துக்கிறேன். அவர்களுக்கு என்னென்ன தேவையோ அதனை நானே பாத்துக்கிறேன்னு சொல்லியிருக்காராம். இதனால் உற்சாகமடைந்த கட்சி நிர்வாகிகள் தினந்தோறும் நாலுபேரை அழைத்து வந்து கட்சியில சேர்க்குறாங்களாம்.கொஞ்சம் பெரிய புள்ளியா இருந்தா அவர்களிடம் சேலத்துத் தலைவரே போனை போட்டு கூப்புடுறாராம். ‘‘தம்பி உங்க உழைப்பு யாருக்கும் தெரியாது. ஆனால் எனக்கு தெரியும். நீங்க நம்ம கட்சியில சேர்ந்துக்கோங்க. எந்தபதவி வேண்டுமானாலும் தாறேன். உங்களை ராசா போல பாத்துக்கிறேன்னு அழைக்கிறாராம். இதனை அருகில் இருந்து பார்க்கும் நிர்வாகிகளோ, எவ்வளவு பெரிய பதவியான பொதுச்செயலாளர் போஸ்டுல இருந்துக்கிட்டு இப்படி இறங்கிபோய் ஆள்பிடிக்கிறாரேன்னு மூக்குமேல விரலை வைக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

The post வெளியில் தலை காட்டாமல் முடங்கி கிடக்கும் பாஜ எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : MLA ,Deerena Raid ,Gili ,Leaf Party ,Peter ,Bajaj ,Yananda ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...