×

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் கோரி வழக்கு: ‘அரசு கொள்கை முடிவில் தலையிட முடியாது’ என ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த பிரேசில், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் உள்ள அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு துவக்கியுள்ளது. சுமார் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் இத்திட்டம் பயன்பாட்டில் உள்ளது. ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் ஏற்கனவே மதிய உணவு திட்டத்தில் பயன் பெறுகின்றனர். ஆனால், காலை உணவு திட்டத்தில் பலர் பயன்பெற முடியாத நிலை உள்ளது. தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட கடலோர பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்பாட்டில் இல்லை.

கடற்கரையோரத்தில் வசிக்கும் மீனவ மக்கள் ஏற்கனவே பொருளாதாரரீதியாக மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். பல மீனவர்களின் குழந்தைகள் ஏழ்மையால் படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளனர். கடலோர பகுதிகளில் அதிகளவில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தான் உள்ளன. இங்கு, காலை உணவு திட்டம் செயல்பட்டால் மீனவ மாணவர்கள் மிகுந்த பலனளிக்கும். எனவே, கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.கலைமதி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் என்பது அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடையது. இது அரசு பள்ளிகளில் மட்டும் தான் செயல்படுத்தப்படுகிறது. கிராமம், ஒன்றியம், நகரம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில் இத்திட்டம் பயன்பாட்டில் உள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், அரசுத் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

The post அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் கோரி வழக்கு: ‘அரசு கொள்கை முடிவில் தலையிட முடியாது’ என ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai ,Brazil ,Thoothukudi ,Tamil Nadu ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...