×

கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வருமானத்திற்கு அதிகமாக 856 சதவீதம் சொத்து குவிப்பு: நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

நெல்லை: கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளராக இருந்த முருகேஷின் நெல்லை வீட்டில் நடத்திய சோதனையைத் தொடர்ந்து அவரும், அவரது மனைவி சகிலாவும் வருமானத்தை விட 856 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்தாக நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் முருகேஷ் (49). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளராக மாற்றப்பட்டார். அப்போது அவர் மீது எழுந்த புகார்கள் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதையடுத்து முருகேஷ் பாளையங்கோட்டை ரகுமத்நகரிலுள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில், முருகேஷின் ரஹ்மத்நகர் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் 13 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் 20 பவுன் நகைகள், ரூ.1.77 லட்சம் மற்றும் ரூ.8 கோடி மதிப்பிலான 250 ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முருகேஷ் மற்றும் அவரது மனைவி சகிலா ஆகிய இருவர் மீதும் லஞ்சம் வாங்குதல், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்தல் என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதில், கடந்த 1-4-2014 முதல் 31-3-2022 வரையிலான காலகட்டத்தில் மட்டும் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் முருகேஷ் ரூ.7 கோடியே 11 லட்சத்து 47 ஆயிரத்து 737 வரையில் சொத்துக்கள் சேர்த்துள்ளார். இந்த காலகட்டங்களில் அவரது சட்டபூர்வமான வருவாயினங்கள், சம்பளம், வங்கி கணக்கு பண வட்டி உள்ளிட்டவற்றில் இருந்து செலவினங்கள் போக வரவேண்டிய வருவாய் ரூ.61 லட்சத்து 16 ஆயிரத்து 438 மட்டுமே ஆகும். ஆனால் அவரது வருமானத்தை விட 856 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. அவரது மனைவி சகிலாவும் உடந்தையாக இருந்துள்ளார் என்று வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி காலகட்டத்திலயே முருகேஷின் தந்தை இறந்து விட்டார். இதனால் அவருக்கு கருணை அடிப்படையில் மாவட்ட தொழில் மையத்தில் அலுவலக உதவியாளர் பணி 90களில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வருமானத்திற்கு அதிகமாக 856 சதவீதம் சொத்து குவிப்பு: நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi District Industrial Center ,Nellie ,Nellai ,Murugesh ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...