திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வங்கி கணக்கில் ரூ.756 கோடி வரவு வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த கார் டிரைவரின் வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடியை ஒரு தனியார் வங்கி சமீபத்தில் வரவு வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோன்றதொரு சம்பவம் தஞ்சாவூரில் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே வீரப்புடையான்பட்டி மேலத்தெருவை சேர்ந்த சந்திரசேகரன் மகன் கணேசன் (29). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விவசாய குடும்பத்தை சேர்ந்த கணேசனுக்கு ரஞ்சிதா என்ற மனைவியும், தாருண்யா, ஹர்ஷினி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
தஞ்சாவூரில் உள்ள கோடக் மகேந்திரா என்ற தனியார் வங்கியில் கணேசன், கடந்த 2 ஆண்டுகளாக வங்கி கணக்கு பராமரித்து வந்திருக்கிறார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு அவரது வங்கி கணக்கில் ரூ.756 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. இதைக்கண்டு ஆச்சரியமடைந்த கணேசன், நேற்று காலை சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று உள்ளார். பின்னர் அங்கிருந்த மேலாளரிடம், தனது செல்போனில் ரூ.756 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக வந்த குறுஞ்செய்தியை காட்டியுள்ளார்.
அதற்கு மேலாளர், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டு சொல்வதாக கூறி கணேசனை திருப்பி அனுப்பியிருக்கிறார். நேற்று மாலை வரை சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. அவரது வங்கி கணக்கிலிருந்து யாருக்கும் பணமும் அனுப்பவும் முடியவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கணேசன் தவித்து வருகிறார். இதுகுறித்து கணேசனிடம் கூறுகையில், ‘எனது அக்கவுண்டில் ரூ.15,000 வைத்திருந்தேன். நண்பர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பினேன். அடுத்த சில நிமிடங்களில் பணம் அனுப்பியது பெயில்டு என மெசேஜ் வந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் எனது அக்கவுண்டிற்கு ஆயிரம் ரூபாய் கிரெடிட் ஆனது.
இதை தொடர்ந்து சில நிமிடங்களில் மற்றொரு மெசேஜ் வந்தது. அதில் என்னுடைய அக்கவுண்டில் லெட்ஜரர் பேலன்ஸின் இருப்பு தொகையாக ரூ.756 கோடி இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்த எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. இதையடுத்து சம்மந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று தகவல் அளித்தேன். ஆனால், வங்கி ஊழியர்கள் இதுதொடர்பாக விசாரித்து உங்களுக்கு போன் செய்கிறோம் என்றனர். எனது வங்கி கணக்கிலிருந்து யாருக்கும் பணம் அனுப்ப முடியவில்லை. வங்கி கணக்கையும் முடக்கி விட்டனர்’ என்றார்.
The post தஞ்சாவூர் அருகே பரபரப்பு வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.756 கோடி டெபாசிட்: அக்கவுன்ட் முடக்கம் appeared first on Dinakaran.