×

தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவ கட்டமைப்பு குஜராத் மருத்துவ குழு பாராட்டு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கட்டமைப்பினை பார்வையிட வந்த குஜராத் மாநில மருத்துவக் குழுவினருடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. பின்னர், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் மூலம், திருவள்ளூர் மற்றும் ஆவடி ரயில் நிலையங்களுக்கு ‘Eat Right Station’ என்ற தரச்சான்றிதழ்கள் அமைச்சர் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

குஜராத் மாநில மருத்துவத் துறை அலுவலர்கள் 60 பேர் கடந்த 3ம் தேதி தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை பார்வையிட வந்துள்ளனர். ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, நந்திவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், பூந்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையம், தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை போன்ற பல்வேறு மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டனர். தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவ கட்டமைப்புகளை பாராட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மகப்பேறு மருத்துவம், இதய அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைகள் சிறப்பாக செய்யப்படுவதை பாராட்டினர். தேசிய மருத்துவ ஆணையம் தென் மாநிலங்களில் மேற்கொண்டு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாது என்பது போன்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இன்னும் பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உடனடியாக முதல்வர் ஒன்றிய அரசுக்கு, தேசிய மருத்துவ ஆணையத்தின் கொள்கை சரியாக இருக்காது என்று மறுப்பு கடிதம் எழுதியுள்ளார். நேற்று முன்தினம் டெல்லிக்கு பட்ெஜட் கலந்துரையாடல் கூட்டத்திற்கு சென்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அரசு செயலாளர் தேசிய மருத்துவ ஆணையத்தின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டிற்கு கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் திட்ட இயக்குநர் ஹரிஹரன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் கோவிந்தராவ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சாந்திமலர், உணவு பாதுகாப்புத்துறை கூடுதல் ஆணையர் தேவபார்த்தசாரதி, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பு அலுவலர் ரமேஷ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* காப்பீட்டு திட்ட அட்டை வழங்க நவ.18ல் 100 இடங்களில் முகாம்

வரும் நவ.18ம் தேதி கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் ஒரே நாளில் காப்பீட்டு திட்ட அட்டைகளை வழங்கும் முகாம்கள் நடத்தப்படும். கடந்த செப்.23ம் தேதி தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்தார். தற்போது வரை 4 பேருக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,652 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவ கட்டமைப்பு குஜராத் மருத்துவ குழு பாராட்டு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Gujarat Medical Board ,Minister ,M. Subramanian ,Chennai ,People's ,Kindi ,Kalyanar Centenary ,Higher Specialty Hospital ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...