×

ஒவ்வொரு கட்சியாக வெளியேறுவதால் இ.டி, சிபிஐ, ஐ.டி., அதானிதான் பாஜ கூட்டணியில் இருப்பார்கள்: ஜோதிமணி கிண்டல்

புதுக்கோட்டை: ஒவ்வொரு கட்சியாக வெளியேறுவதால் இ.டி, சிபிஐ, ஐ.டி., அதானிதான் பாஜ கூட்டணியில் இருப்பார்கள் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கிண்டலடித்து உள்ளார். ராகுல்காந்தியை ராவணனை போல சித்தரித்து சமூக ஊடகங்களில் படங்களை வெளியிட்டு வரும் பாஜவை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட பாஜ அலுவலகம் முன்பு நேற்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அளித்த பேட்டி: ராகுல் காந்தியை பத்துத் தலை ராவணனாக சித்தரித்து பாஜவினர் சமூக ஊடகங்களில் படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில், பாஜ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். அரசியல் ரீதியாகதான் நாங்கள் விமர்சனங்களை முன் வைக்கிறோம். பாஜ மற்றும் ஆர்.எஸ்.எஸ். காரர்களிடம் அந்த பொறுப்புணர்வை எதிர்பார்க்க முடியாது. கடந்த 9 ஆண்டுகளில் செய்த சாதனைகள் என எதையும் சொல்ல முடியாத பாஜ, பொய்யையும், புரட்டுகளையும் மட்டுமே சொல்லி வருகிறது. அதிமுக – பாஜ கூட்டணி பிரிந்தாலும், சேர்ந்தாலும் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளையும் இந்தியா கூட்டணிதான் வெல்ல போகிறது.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியை முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் தலைமை வகித்து வழிநடத்துகிறார். திமுகவுக்கும், பாஜவுக்கும்தான் போட்டி என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதை ஒரு பொருட்டாகவே கருத முடியாது. அண்ணாமலை தமிழகத்தில் ஒரு என்டர்டெய்னராக உள்ளார். உண்மையில் பாஜவுக்கும், நோட்டாவுக்கும்தான் போட்டி. பாஜவின் நடவடிக்கைகளை பார்த்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பலரும் வெளியே வரத்தொடங்கியுள்ளனர். கடைசியில் மோடியுடன் அமலாக்கதுறை (இ.டி), சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் அதானிதான் கூட்டணியில் இருப்பார்கள்.

The post ஒவ்வொரு கட்சியாக வெளியேறுவதால் இ.டி, சிபிஐ, ஐ.டி., அதானிதான் பாஜ கூட்டணியில் இருப்பார்கள்: ஜோதிமணி கிண்டல் appeared first on Dinakaran.

Tags : CBI ,Adani ,BJP ,Jyothimani Kindal Pudukottai ,Congress ,Jyotimani ,CPI ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...