×

லோன் மூலம் பெற்ற ரூ.1.70 லட்சம் கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ராமஞ்சேரி பகுதியை சேர்ந்த தாஸ் என்பவரின் மகன் பூமிநாதன். இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இந்தியன் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்து அந்த பணம் இவரது வங்கிக் கணக்கில் வரவாகியுள்ளது. இதனையடுத்து குழந்தைகளின் கல்வி கட்டணம் மற்றும் குடும்ப செலவுக்காக நேற்று திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கியில் ரூ.1.70 லட்சம் பணம் எடுத்துக் கொண்டு பிள்ளைகளுக்கு ஸ்கூல் பேக் வாங்குவதற்காக காக்களூர் சாலையில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது வங்கியில் இருந்து எடுத்த பணத்தை ஒரு பையில் போட்டு அதை டேங்க் கவரில் வைத்திருந்தவர் அதையும் எடுத்துக்கொண்டு கடைக்கு உள்ளே சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கிளம்பும்போது இரு சக்கர வாகனம் பஞ்சரானது தெரியவந்தது. இதனையடுத்து அருகில் உள்ள பஞ்சர் கடையில் பஞ்சர் போடும்போது, மெக்கானிக்கிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ.1.70 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். பஞ்சர் போட்டு முடிந்ததும் டேங்க் கவரை பார்த்தபோது பணம் வைத்திருந்த பை இல்லாததை கண்டு பூமிநாதன் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சந்தேகப்படும்படியாக வண்டி அருகே நின்று கொண்டு இருந்தவர்களை தேடி பார்த்துள்ளார். ஆனால் யாரும் கிடைக்காததால் இதுகுறித்து பூமிநாதன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது இரண்டு இளைஞர்கள் மெக்கானிக் கடை அருகே செல்வதும் அதே இளைஞர்கள் ஸ்கூல் பேக் வாங்கும் கடையில் வண்டி அருகே நிற்பதும் தெரிய வந்துள்ளது.

எனவே வங்கியில் இருந்து பணத்தை எடுத்தது முதல் பூமிநாதனை அந்த மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்ததும், வண்டியை பஞ்சர் ஆக்கி அதன் மூலம் பஞ்சர் போடும்போது பணத்தை கொள்ளை அடித்ததும் உறுதியானது. இதனை அடுத்து தாலுகா போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லோன் மூலம் பெற்ற ரூ.1.70 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Boominathan ,Das ,Ramancheri ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் தொகுதி எம்.பி.யாக...