×

மனதின் மாயம் போக்கும் மகத்தான நாமம்

அஷ்டமி சந்திர விப்ராஜ தளிக ஸ்தல சோபிதா

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

இதற்கு முன்புள்ள இரண்டு நாமங்களான சம்பகா சோக புன்னாக ஸௌகந்தி கலஸ்தகசா மற்றும் குருவிந்த மணிச்ரேணீ கந்த கோடீர மண்டிதா என்ற இரண்டு நாமங்களில் அம்பிகையின் கேசத்தின் வர்ணணையும், அந்த கேசத்தினுடைய வர்ணனை மற்றும் அந்த கேசத்தில் அணிந்து கொண்டிருக்கும் கிரீடத்தினுடைய வர்ணனையும் அதன் தத்துவார்த்தமும் பார்த்தோம்.

இதில் தொடர்ச்சியாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், அம்பிகையானவள் சிதக்னியிலிருந்து ஆவிர்பவிக்கின்றாள். அதாவது ஆத்மாவாகிய அந்த பெருஞ்சக்தி தன்னை ஒரு ஜீவனான சாதகனிடத்தில் வெளிப்படுத்திக் கொள்கின்றாள். அப்போது மேல்நோக்கி எழும்பும்போது அந்த கேச பாரத்தினுடைய தரிசனத்தை காண்கின்றாள். அதற்கு பிறகு கிரீடம் தெரிகின்றது. இப்போது அந்த கிரீடத்திற்குக் கீழே நெற்றிப்பகுதி தெரிகின்றது.

இந்த நெற்றிப்பகுதியானது நமக்கு யோக மார்க்கத்தில் லலாட ஸ்தானம். மிகவும் முக்கியமான இடம். அதாவது ஆக்ஞா சக்கரம். இப்போது இந்த நெற்றியினுடைய தரிசனம் கிடைக்கின்றது. அந்த நெற்றிக்குத்தான் அஷ்டமி சந்திர விப்ராஜ தளிக ஸ்தல சோபிதா என்று பெயர். அந்த நெற்றிக்கு வசின்யாதி வாக் தேவதைகள் ஒரு உவமை கொடுக்கின்றார்கள். அது என்ன உவமை எனில் அஷ்டமி சந்திரனைப்போன்று பிரகாசிக்கும் நெற்றியை உடையவள் என்று பொருள்.

ஏன் இங்கு அஷ்டமி சந்திரனை உவமையாக்க வேண்டும். சந்திரனுடைய கலைகளைக் கவனிப்போம். ஒரு பட்சத்தை எடுத்துக் கொள்வோம். அமாவாசையிலிருந்து பௌர்ணமி, வளர்பிறை. பிறகு பௌர்ணமியிலிருந்து அமாவாசை. இப்படி பதினைந்து நாட்களாக சந்திரனின் கலைகள் வளர்ந்து தேய்ந்து, தேய்ந்து வளர்ந்து என்று மாறுபாடு அடைந்து கொண்டேயிருக்கின்றது. இப்படி ஒரு பட்சத்தின் பதினைந்து நாட்களில் நடுவில் இருப்பது அஷ்டமியாகும்.

இந்த அஷ்டமி அன்றுதான் சந்திரன் சரிபாதியாக இருக்கிறது. அம்பிகையினுடைய முகமே சந்திரனுக்கு உவமையாகின்றது. இப்படி முழு முகமும் சந்திரன் என்று சொன்னோமெனில் இந்த நெற்றிப் பகுதி மட்டும் பாதி சந்திரனாகின்றது. அதாவது அர்த்த சந்திரன். இப்படி சந்திரனின் சரி பாதியாக அம்பிகையின் நெற்றிவிளங்குகின்றது என்று இந்த நாமம் சொல்கின்றது. இது நேரடியான பொருள்.

இப்போது சூட்சுமமான விஷயத்தைப் பார்ப்போம்

சிதக்னி குண்டத்திலிருந்து எழுந்த அம்பிகையான சொரூபத்தை தரிசிக்கின்றான். அந்த தரிசனம் எப்படிப்பட்ட ஆனந்தமாக இருந்தது என்பதைப் பார்த்தோம். இந்த ஆனந்தத்திற்கு மேல் இன்னொரு ஆனந்தம் இல்லை என்பதாக அந்த கிரீடம் இருக்கின்றது. இப்போது இந்த நாமத்தில் அஷ்டமி என்கிற பெயர் வருகின்றது. இந்தப் பக்கம் ஏழு அந்தப் பக்கம் ஏழு என்று நடுவே இருக்கின்றது. இந்த நடுவே என்பது சமநிலை குறிப்பதாகும்.

இப்போது இதேபோல் இந்த ஆத்மானுபவம் பெற்ற சாதகன் என்ன ஆகிறான் எனில், அவன் ஒரு நிலைக்கு வருகின்றான். எந்தப் பக்கமும் சாயாத ஸ்திதப் பிரக்ஞன் என்கிற நிலைக்கு வருகின்றான். அவனை நன்மை தீமை என்ற இருமை பாதிக்காது. புண்ணியம் பாவம் பாதிக்காது. சரி, தவறு பாதிக்காது. இன்பம் துன்பம் பாதிக்காது. இந்த உலகத்தில் இருக்கக் கூடிய எந்த இருமைகளும் (duality) அவனை பாதிக்காது. நெருங்காது.

ஏனெனில், அவன் மத்தியில் இருக்கின்றான். இனி எந்தப் பக்கமும் சாயாத, சலனமில்லாத சலனமற்ற நிலையை எய்திவிடுகின்றான். மனம் நின்று போய்விடுகின்றது. அவன் உலக நியதிகளுக்குண்டான இருமைகளை கடந்துவிட்டான். இந்த நெற்றியினுடைய தரிசனம்தான் ஸ்தித பிரக்ஞ நிலையை உணர்த்துகின்றது. எப்படி அஷ்டமி சந்திரன் சரியாக இந்தப் பக்கம் ஏழு நாள் அந்தப் பக்கம் ஏழு நாள் நடுப்பாதியாக நிற்கிறதோ, அதுபோல எந்தப் பக்கமும் இல்லாமல் சரியாக நிற்கிறான்.

இந்த நிலையை பௌத்தத்தில் மாத்யமிகம் (மத்திய) என்கிறார்கள். நாகார்ஜுனருடைய சித்தாந்தம் இந்த நிலையை விவரிக்கின்றது. பௌத்தத்தில் சம்யக் என்கிறார்கள். நடுவில் நிற்றல் என்று பொருள்.திருக்குறளில் வள்ளுவர்,

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல்
அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

நாமம் சொல்லும் கோயில்

நேரடியாக சோம கலை என்ற பெயர் வரும்படியாக அம்பாள் இங்கு அருள்கிறாள். இறைவன்- சோமநாதர். இறைவி- சோம கலாம்பிகை கும்பகோணம்-வலங்கைமான் சாலையில் உள்ள மருதாநல்லூரில் இருந்து வலப்புறம் பிரியும் சாலையில் கொற்கை தாண்டி இடப்புறம் செல்லும் சாலை பழையாறையை சென்றடையும். இவ்வூர் மேலப் பழையாறை கீழப்பழையாறை என இரு பிரிவுகளை உள்ளது. இதில் கீழபழையாறையில் கிழக்கு நோக்கிய இக்கோயில் உள்ளது.

சோழ மன்னர் சுந்தரசோழரின் தலைநகராக விளங்கிய மண். கம்பீரமான ஏழுநிலை முதன்மைக் கோபுரம் இருந்தது, காலப் போக்கில் அழிந்தது போக அதன் கல்ஹாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. எனினும் மாடு இளைத்தாலும் அதன் கொம்பு இளைக்கவில்லை எனும் கிராமத்துச் சொலவடை க்கு ஏற்ப கம்பீரமாய் இரண்டரை ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது. உள்ளே நுழைந்தவுடன் முதல் மற்றும் இரண்டாம் கோபுரத்தின் இடைப்பட்ட பகுதியில் அம்பிகை திருக்கோயில் எட்டு அடிக்கும் மேற்ப்பட்ட உயர அடித்தளத்துடன் உள்ளது.

அதன் முன்புறம் அதிட்டான அங்கங்களில் பலவித நாட்டியப் பெண்களும், முன்பகுதியில் நரசிம்ம மூர்த்தி ஹிரண்ய கசிபு சம்ஹாரகாட்சி செதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளுடன் உள்ளது அதனை கடந்தால் பெரியதொரு பரப்பில் கம்பீரமாய் பட்டத்து யானை போல் தற்போது புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது இறைவனின் திருக்கோயில் முன்பகுதி தாராசுரத்தினை நினைவு படுத்தும். ராஜராஜனால் திருப்பணி செய்யப்பட்டு அருண்மொழி தேவேச்சுரம் என வழங்கப்பட்டது.

ஆறை என்றால் ஆற்றிடைப்பட்ட ஊர் என பொருள், இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பெற்ற அவ்வூர் சோழப்பேரரசர்கள் ஆட்சி செய்த 430 ஆண்டுக் காலம் தமிழக வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற பெருநகரமாக விளங்கியது. மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் காலம் வரை பழையாறை என்றழைக்கப்பட்ட இந்நகரம் இராஜேந்திர சோழன் காலம் முதல் ‘முடிகொண்ட சோழபுரம்‘ என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றது.

அமர்நீதி நாயனார் இவ்வூரில் பிறந்தார். முழையூர், பட்டீச்சுரம், திருச்சக்தி முற்றம், சோழ மாளிகை, திருமேற்றளி, கோபிநாத பெருமாள் கோயில், ஆரியப் படையூர், புதுப் படையூர், பம்பைப் படையூர், மணப்படையூர், அரிச்சந்திரபுரம், தாராசுரம், நாதன்கோயில் ஆகிய ஊர்கள் அடங்கிய ஊரே பழையாறு ஆகும். பழையாறை ஊர் நான்கு சிறு பிரிவுகளாக இருந்தது. வடதளி, மேற்றளி, கீழ்த்தளி மற்றும் தென்தளி ஆகிய பிரிவு களாக இருந்தன. அவற்றில் இன்று வடதளி தர்மபுரீஸ்வரர் கோவிலும், கீழ்த்தளி சோமேஸ்வரர் கோவிலும் உள்ளது.

கருவறைஇடை மண்டபம், முக மண்டபம், என நீண்ட மண்டபங்களுள்ளன. இவற்றில் முக மண்டபம் குதிரை இழுப்பது போன்றதொரு அமைப்பில் உள்ளது பிற்சேர்க்கையாக இருக்கலாம். கருவறைமேல் உயர்ந்த கோபுரம் உள்ளது. பின் புறம் விநாயகர் முருகனுக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளன. இங்குள்ள துர்க்கை வீரதுர்க்கை என அழைக்கப்படுகிறாள்.

தன்னம்பிக்கை, மண் திண்மை வேண்டி இவ்வம்மையை சிறப்புடன் வழிபடுகின்றனர். சந்திரன் வழிபட்டு தன் சயரோகம் நீங்க வழிபட்டதால் இறைவனுக்கு இப்பெயர். தஞ்சையை ஆண்ட மாமன்னர் இராஜ ராஜ சோழன் வீரம் நிறைந்த வரலாற்றை விளக்கும் வகையில் இந்த திருக்கோவில் மிகவும் பிரம்மாண்டமான அளவில் அமைந்துள்ளது.

The post மனதின் மாயம் போக்கும் மகத்தான நாமம் appeared first on Dinakaran.

Tags : ASHTAMI CHANDRA VIBRAJA TALA SOPITA ADI SHAKTI ,LALITA SAHASRANAMAS ,RAMYA VASUDEVAN ,
× RELATED அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி