×

தோற்றத்தின் முதல் பார்வை தலைமுடியே!

நன்றி குங்குமம் தோழி

இன்றைய நவநாகரீக காலத்தில் இருபாலர்களுக்கும் இன்று தலையாய பிரச்சனை தலை முடி உதிர்தல் மட்டுமே. ஆண்-பெண் இருவருமே முடி கொட்டுதல் மற்றும் வழுக்கை விழுதல் போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். பரபரப்பான வாழ்க்கையில் நாம் வேலை என்று ஓடிக்கொண்டு இருப்பதால், நம்மை பராமரித்துக் கொள்ள நேரம் ஒதுக்குவதில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த முடி கொட்டுதல் பிரச்னைக்கு அழகுக்கலை நிபுணர் தமிழ் செல்வி காரணங்கள் மற்றும் தீர்வுகளை அளிக்கிறார்.

ஒவ்வொரு பெண்ணின் உடலின் தன்மை, தட்பவெப்பம், அவர்கள் வசிக்கும் இடத்திற்கு ஏற்ப தான் அவர்களின் முடி வளர்ச்சி அமையும். தலை முடி எப்போதும் அடிப்
பகுதியில் இருந்து தான் வளரும். அதனால் முடியின் நுனிப்பகுதியை சரியான சம அளவில் வெட்டி, பராமரித்து வந்தால், முடி சீராகவும், நீளமாகவும் வளரும். ஒவ்வொருவரின் முடியின் தன்மை மாறுபடும். அவர்களின் தலைமுடியின் தன்மை என்ன என்று அறிந்து அதற்கு ஏற்ப பராமரிப்பது அவசியம். சிலருக்கு மிருதுவான தன்மையுடன், கருகருவென இருக்கும். ஒரு சிலருக்கு அடர்த்தியாக, கோரை, வெல்வெட்டு போல வழவழப்பாக, மடங்காமல் குச்சி குச்சியாக, சுருள் தன்மையில் இருக்கும்.

தலை முடி உதிர பல முக்கிய காரணங்கள் உள்ளன. உப்பு தண்ணீரில் குளித்தல், பிளீச்சிங் கலந்த தண்ணீர் உபயோகித்தல், அதிக நேரம் தலை ஈரமாக இறுக்கமாக சுற்றி வைத்தல், எண்ணெய் பசை மற்றும் ஷாம்பூ வாசனை போகாமல் முடியை அலசுவது, பாலிஸ்டர் டவல்கள் பயன்படுத்துவது, மலச்சிக்கல், ரத்த சோகை போன்ற காரணத்தால் முடி உதிர வாய்ப்புள்ளது. அதிக வெள்ளைப்போக்கு மற்றும் ஒழுங்கற்ற ரத்தப்போக்கு, மகப்பேறு காலங்களுக்கு பிறகு ஏற்படும் ரத்த இழப்பு காரணமாகவும் முடி உதிரும். பொடுகு தொல்லை, அதிக மன உளைச்சல், இரவில் அதிக நேரம் கண்விழித்தல், உடலில் சூடு அதிகமாகுதல், அடிக்கடி மாமிச உணவுகளை உட்கொள்வது, பிளாஸ்டிக் பாய் மேல் உறக்கம் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.

தலை முடியை பாதுகாக்க நாம் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். எப்போதும் எண்ணெயை மிதமான சூட்டில் சூடு செய்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து பிறகு தலை குளிக்கலாம். ஷாம்பூ அல்லது சீயக்காய் பவுடர் போட்டு குளித்த பிறகு கண்டிப்பாக கண்டிஷ்னர் பயன்படுத்த வேண்டும். இது முடியினை மிருதுவாகவும் எளிதில் வறண்டு போகாமல் பாதுகாக்கும். கெமிக்கல் மற்றும் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் தலைக்கு குளித்தவுடன் கட்டாயம் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவேண்டும். மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சு தேய்த்து வர இளநரையை தவிர்க்கலாம். சர்க்கரை நோய் மற்றும் தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு முடி கொட்டுவது இயல்பானது. அதைத் தவிர்க்க மருத்துவரின் ஆலோசனைப் படி வைட்டமின் மாத்திரைகளை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வைட்டமின் E எண்ணெயினை 10/3 என்ற பங்கு அளவில் கலந்து, பூசிவர முடி வளர்ச்சி அடையும். தேங்காய்ப்பாலுடன், பச்சையான கற்பூரவல்லி இலை சேர்த்து, வெயிலில் காயவைத்து, முடியில் பூசினால், முடி அடர்த்தியாக வளரும். சில நேரங்களில் உடலில் ஏற்படும் உபாதை மற்றும் ஒவ்வாமை காரணமாகவும் முடி உதிரும் வாய்ப்புள்ளது. அதற்கான காரணம் என்ன என்று அறிந்து சிகிச்சை பெற்றால் முடி உதிர்வதை தவிர்க்கலாம்.

தேங்காய்ப்பால் எடுத்து காயவைத்து அதில் வெட்டிவேர், வெள்ளைமிளகு இரண்டையும் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி கொட்டாது. கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ இரண்டையும் உலர வைத்து பிறகு எண்ணெயில் கலந்து காயவைத்து, தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் சூடு தணிந்து முடி கொட்டுவது நிற்கும். முட்டையின் வெள்ளைக்கரு, சிறுவால்மிளகு இரண்டையும் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி வேருடன் கொட்டுவதை தடுக்கலாம்.

காய்ந்த செம்பருத்தி பூ, ஆவாரம்பூ, மருதாணி பூ மூன்றையும் வெயில் படாமல் நிழலில் உலர்த்தி, சிறு துணியில் கட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு உபயோகித்துவந்தால், கடுமையான வெயில் காலத்தில் ஏற்படும் முடி உதிர்வை தடுத்து முடி வளரும். வேப்பம்பூ, மருதாணி பூ, இரண்டையும் வெயில் படாமல் காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு தேய்த்துவர, வெப்பத்தால் தலையில் ஏற்படும் பருக்கள், மற்றும் கட்டிகள் மறையும்.

தலையில் எண்ணெய் தடவினாலும் நம்முடைய உணவுகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து குறைந்தால் முடி உதிர ஆரம்பிக்கும். இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்துள்ள பழங்களை, தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். வாரம் 2 முறை எல்லா வகை கீரை, முளை கட்டிய பருப்புகள், காய்கறி மற்றும் பழ சாலட், பழச்சாறுகள் என ஆரோக்கியமான உணவை உண்டுவந்தால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு முடி கொட்டாமல் பாதுகாக்க முடியும். வெயில் காலத்தில் அடிக்கடி தண்ணீர் குடிக்கவேண்டும். நீர்சத்துள்ள தர்பூசணி, கிர்ணி, எலுமிச்சை பழம் ஆகியவைகளை உட்கொள்ளலாம்.

தலைக்கு குளிக்கும் போது கவனிக்க வேண்டியவை

*இப்போது சீயக்காய் தேய்த்து குளிக்கும் பழக்கம் முற்றிலும் குறைந்துவிட்டது. அனைவரும் ஷாம்புக்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் போது, அதிக ரசாயனம் இல்லாத ஷாம்புக்களை பயன்படுத்த வேண்டும். அதனை தண்ணீரில் கலந்து பிறகு தலையில் தேய்க்கலாம்.

*தலைக்கு குளிக்கும் போது கண்டிப்பாக தலையில் எண்ணெய் வைப்பது அவசியம். இல்லை என்றாலும் முடி வறண்டு போக வாய்ப்புள்ளது.

*தலை மண்டையில் ஷாம்பூ முற்றிலும் இல்லாதபடி அலச வேண்டும்.

*தலைக்கு குளித்த பிறகு கண்டிஷ்னர் பயன்படுத்துவது அவசியம். அவ்வாறு பயன்படுத்தும் போது அதனை நன்கு அலசிட வேண்டும்.

*தலைமுடி நன்கு காய்ந்த பிறகே சீப்பு கொண்டு சீவ வேண்டும். ஈரத்துடன் முடியினை சீவினால் முடியின் உறுதி குறையும் வாய்ப்புள்ளது. அதேபோல் தலைமுடி ஈரமாக இருக்கும் போது பின்னல் போடக்கூடாது.

*தலைமுடி வறண்டு போகாமல் இருக்க தலைமுடிக்கான சீரம் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கினார் அழகுக்கலை நிபுணர் தமிழ் செல்வி.

தொகுப்பு: பிரியா மோகன்

The post தோற்றத்தின் முதல் பார்வை தலைமுடியே! appeared first on Dinakaran.

Tags :
× RELATED பசுமைப் போராளி…வான்காரி மாத்தாய்