×

தமிழக பக்தர்களிடம் மோசடி செய்த குருவாயூர் கோயில் ஊழியர் மீது புகார்

திருவனந்தபுரம்: குருவாயூர் கோயிலில் ஏற்கனவே பயன்படுத்திய சிறப்பு தரிசன டிக்கெட்டை கொடுத்து தமிழக பக்தர்களிடமிருந்து ரூ.4 ஆயிரம் பணம் வாங்கி மோசடி செய்ததாக கோயில் ஊழியர் மீது புகார் கூறப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் உள்ள கோயில்களில் குருவாயூர் கிருஷ்ணன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தினமும் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இதனால் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தால் மட்டுமே இங்கு தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுமுறை நாட்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் ரூ.1000க்கு நெய் விளக்கு பிரசாத டிக்கெட்டை வாங்கினால் ஒரு நபருக்கு விரைவில் தரிசனம் செய்யலாம். இதனால் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் பலரும் இந்த டிக்கெட்டை வாங்கி தரிசனம் செய்வது வழக்கம். தரிசனம் செய்த பிறகு டிக்கெட்டை கோயில் கவுண்டரில் கொடுத்தால் சிறப்பு பிரசாதமும் கிடைக்கும்.
இந்தநிலையில் தமிழகத்தை சேர்ந்த 4 பக்தர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக சென்றனர். அப்போது கோயிலில் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. இந்த சமயத்தில் தமிழக பக்தர்களை அணுகிய ஒரு கோயில் ஊழியர், ரூ.1000 சிறப்பு தரிசன டிக்கெட் தன்னிடம் இருப்பதாகவும் அதை வாங்கினால் விரைவில் தரிசனம் செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

அதை நம்பிய அவர்கள், ரூ.4 ஆயிரம் கொடுத்து 4 டிக்கெட்டுகளை வாங்கி தரிசனத்திற்கு சென்றனர். ஆனால் கோயில் வாசலில் இருந்த பாதுகாப்பு ஊழியர், அது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட டிக்கெட் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பி வைத்தார். அதிர்ச்சியடைந்த தமிழக பக்தர்கள் இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரியிடம் புகார் செய்தனர். தரிசனம் முடிந்த பிறகு பிரசாதம் பெறுவதற்காக பக்தர்கள் கவுண்டரில் கொடுத்த டிக்கெட்டை அந்த கவுண்டரில் இருந்த ஊழியர் தமிழக பக்தர்களிடம் கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. அந்த ஊழியர் யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல அந்த கவுண்டரில் இருக்கும் ஊழியர் மேலும் பலரை ஏமாற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

The post தமிழக பக்தர்களிடம் மோசடி செய்த குருவாயூர் கோயில் ஊழியர் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Guruvayur Temple ,Thiruvananthapuram ,
× RELATED நடிகர் ஜெயராம் மகள் மாளவிகா திருமணம்: குருவாயூர் கோயிலில் நடந்தது