×

சுற்றுலா தளமாக அறிவிப்பு: முத்துக்குடா அலையாத்தி காட்டை மேம்படுத்தும் பணி தீவிரம்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டத்தில் குகை ஓவியங்கள், கோயில்கள், கோட்டைகள், அரண்மனைகள் ஆகியவற்றின் வரிசையில் இணைந்துள்ள மற்றொரு சுற்றுலா தளம் இயற்கை எழில் கொஞ்சும் முத்துக்குடா அலையாத்தி காடு. மாவட்டத்தின் கடைக்கோடியில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ளது மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை. இதன் அருகே கடற்கரையையொட்டி சுமார் 5 கி.மீ தொலைவிற்குத் தீவு போன்று நாட்டாணி புரசகுடி ஊராட்சியில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது அலையாத்திக்காடு. இது புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் எல்லையில் 2 தீவுகளாக காணப்படுகிறது.

இந்த காடு மற்றும் கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான வெளிநாடு, உள்நாட்டு பறவைகள் முகாமிட்டுள்ளன. அலையாத்திக் காடுகளுக்கு நடுவே இயற்கையாகவே கால்வாய் அமைந்துள்ளது. கடலுக்கு நடுவே சில இடங்களில் மணல் திட்டுகள் அமைந்திருக்கின்றன. அலையாத்திக் காடுகளைக் கண்டு ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கும் இடமாகவும் இவை விளங்குகின்றன. கடலுக்கு நடுவே படகில் செல்லும்போது மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடுவதை கண்டு ரசிக்கலாம்.

காடுகளை ரசித்து பார்த்தபடி படகில் பயணிப்பது, பறவைகளை கண்டு ரசிப்பது அலாதி இன்பத்தை தரும். இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது. ஆனால் அடிப்படை வசதிகள் அவ்வளவாக இல்லை. மேலும் படகுகளை வாடகைக்கு எடுத்து தான் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இதனால் முத்துக்குடா அலையாத்திக்காட்டை சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி அறந்தாங்கி எம்எல்ஏ ராமசந்திரன் சட்டசபையில் பேசினார். இதையடுத்து கடந்த 8-6-22ல் முத்துக்குடா சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டது. மேலும் முதல் கட்டமாக மேம்பாட்டு பணிகளுக்காக சுற்றுலாத்துறை மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்த நிதி மூலம் தெருவிளக்கு, படகு குழாம் அமைத்தல், கழிப்பறை வசதி, சுற்றுலா பயணிகள் தங்க கட்டிடம், அலுவலகம் கட்டும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுபற்றி நாட்டாணி புரசகுடி ஊராட்சி மன்ற தலைவர் சீதாலெட்சுமி கூறுகையில், முத்துக்குடாவை சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கடந்த 18 வருடங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அது நிறைவேறி உள்ளது. முத்துகுடா சுற்றுலா தள பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் 6 மாதத்தில் நிறைவு பெற்று சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

The post சுற்றுலா தளமாக அறிவிப்பு: முத்துக்குடா அலையாத்தி காட்டை மேம்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Muthukuta Alaithi Forest ,Aandangi ,Pudukotta ,Muthukuda Alalithi forest ,Dinakaraan ,
× RELATED ‘அதிமுக-பாஜ கூட்டணி முறிவு காதலர்களின் தற்காலிக பிரிவு’