×

அதிமுக வழங்கிய முத்துராமலிங்க தேவர் சிலைக்கு உரிய தங்க கவசத்தை வழங்கக்கோரிய வழக்கு: ஓபிஎஸ் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..!!

சென்னை: அதிமுக வழங்கிய முத்துராமலிங்க தேவர் சிலைக்கு உரிய தங்க கவசத்தை அ.தி.மு.க. பொருளாளர் சீனிவாசனிடம் வழங்கக்கோரிய வழக்கில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அக்டோபர் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் திருமகனாரின் குருபூஜை வருகின்ற 30ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருபூஜைக்காக அதிமுக தரப்பில் அப்போதைய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தரப்பில் தேவரின் மார்பளவு சிலையில் பொருந்தக்கூடிய வகையில் தங்க கவசம் ஒன்று வழங்கப்பட்டது.

இந்த தங்க கவசம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குருபூஜை முடிந்த பின்பு, மதுரை அண்ணா நகரில் பேங்க் ஆப் இந்தியாவின் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பூஜைக்காக வருடந்தோறும் அதிமுக தரப்பில் அதிமுக பொருளாளர் கையொப்பமிட்டு தங்க கவசத்தை வாங்கி செல்வார்கள். கடந்த சில ஆண்டுகளாக அதிமுக பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக்கவசத்தின் காப்பாளராக இருந்தார். தற்போது கட்சியின் பிரச்னை காரணமாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகவும், திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தங்க கவசத்தை யார் பெறுவது என்ற சர்ச்சை நிலவியது. இந்நிலையில், வருகின்ற 30ம் தேதி தங்கள் தரப்பிற்கு தங்க கவசத்தை வங்கி அதிகாரிகள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், கட்சியில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதால் தங்க கவசத்திற்கு அவர் உரிமை கோர முடியாது. அக்டோபர் 30ல் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி தங்க கவசத்தை சீனிவாசன் வசம் ஒப்படைக்க வங்கி நிர்வாகத்திற்கு ஆணையிட வேண்டும். வங்கி லாக்கரில் உள்ள தங்க கவசத்தை தற்போதைய அதிமுக பொருளாளர் சீனிவாசன் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து வழக்கு குறித்து பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் தர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை விடுத்தது. கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, 30ம் தேதி குருபூஜை வரவுள்ளதால் அதற்கு முன்னதாகவே அவர்கள் சிலையை வாங்க வேண்டியுள்ளது. எனவே வருகின்ற 10ம் தேதி விரிவான பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

The post அதிமுக வழங்கிய முத்துராமலிங்க தேவர் சிலைக்கு உரிய தங்க கவசத்தை வழங்கக்கோரிய வழக்கு: ஓபிஎஸ் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Muthuramalinga Devar ,CHENNAI ,ADMK ,O. Panneerselvam ,Treasurer ,Srinivasan ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...