×

வெங்கத்தூர் ஊராட்சி, மணவாளநகர் பகுதியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு: வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு அறிவுரை

திருவள்ளூர், அக். 6: திருவள்ளுர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள கிராமங்கள் மற்றும் காய்ச்சல் பரவக்கூடிய வாய்ப்பு உள்ள கிராமங்களை கண்டறிந்து ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 7 முகாம் வீதம் 14 வட்டாரங்களிலும் மற்றும் ஆவடி மாநகராட்சியிலும் மொத்தம் 104 சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாம் நடைபெறும் கிராமங்களில் கொசுப் புழு ஒழிப்பு பணியும் மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அனைவரும் இம்முகாம் நடைபெறும் இடங்களில் காய்ச்சல் மற்றும் சளி இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்திடவும், ரத்தப் பரிசோதனைகள் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் ஒவ்வொரு வட்டாரத்திலும் தலா 40 டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு தோறும் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் ஊராட்சி, மணவாளநகர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள வீடுகளில் சுகாதாரத் துறை துணை இயக்குனர் கே.ஆர்.ஜவஹர்லால் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு டெங்கு காய்ச்சல் குறித்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விளக்கி பேசினார்.

வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் தொட்டி மற்றும் தண்ணீரைப் பிடித்து வைக்கும் பிளாஸ்டிக் பேரல்களில் கொசு முட்டைகளை அழிக்கும் வகையில் பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து தண்ணீரைப் பிடித்து வைத்தும், அந்த பிளாஸ்டிக் பேரல்களை துணி போட்டு மூடி வைக்குமாறு அறிவுரை வழங்கினார். தங்கள் வீட்டிலும் மற்றும் சுற்றுப்புறத்திலும் கொசுப்புழு உருவாவதை தடுக்க மழை நீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் பொருட்களான டயர்கள், கொட்டாங்குச்சி, டீ கப்புகள் போன்றவற்றில் மழை நீர் தேங்காத வண்ணம் அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

மேலும் பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் தாமாகவே மருந்தகங்களில் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடாமல் மற்றும் போலி மருத்துவர்களை அணுகி சிகிச்சை மேற்கொள்ளாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும், டாக்டர்கள் கூறும் அறிவுரைப்படி நடந்து கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரையும் பரிசோதனை செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த காய்ச்சல் முகாமினையும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கடம்பத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் ராணி, பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பிரியங்கா, துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மோகன், சுகாதார ஆய்வாளர்கள் ஞானசேகரன், தளபதி மற்றும் மருத்துவத்துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்.

The post வெங்கத்தூர் ஊராட்சி, மணவாளநகர் பகுதியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு: வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Venkathur Panchayat ,Manawala Nagar ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...