×

வேளாண் பல்கலையில் நீர் வெப்ப திரவமாக்கல் உலைக்கு தேசிய காப்புரிமை

 

கோவை, அக். 5: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் துறையின் விஞ்ஞானிகளான திவ்ய பாரதி மற்றும் முனைவர் சுப்பிரமணியன் ஆகியோர்களின் மூலம் நீர்வெப்ப திரவமாக்கல் கலனுக்கான தேசிய காப்புரிமையை பெற்றுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகத்தால் இந்த காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நீர் வெப்ப திரவமாக்கல் அமைப்பானது, கலக்குவான், வெப்பப்படுத்துவான் மற்றும் குளிர்வி ஆகிய பாகங்களை கொண்ட உயர் அழுத்த கலனாகும். இக்கலனானது, ஈரத்தன்மை அதிகமுள்ள உயிரி கழிவுகளிலிருந்து உயிரி எண்ணெய் உற்பத்தி செய்ய உதவுகிறது. நீர்வெப்ப திரவமாக்கல் முறையில் கரி மற்றும் நீர் திரவம் ஆகியவை உப பொருளாக கிடைக்கின்றன. உயிரி எண்ணெயை நேரடியாக உலைகளில் எரி பொருளாகவும், சுத்திகரித்து வாகனங்களில் எரி பொருளாகவும் பயன்படுத்தலாம்.

கரியானது, திட உயிரி எரிபொருளாக பயன்படுவதுடன் மண் வளத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இம்முறையில் பெறப்படும் மற்றொரு உபபொருளான நீர் திரவம் அங்கக ரசாயனங்கள் மற்றும் ஊட்ட சத்துகளை கொண்டது. இதிலுள்ள, ரசாயனங்களை தொழிற்சாலைகளில் உகந்த முறைகள் மூலம் பிரித்தெடுத்து பயன்படுத்தலாம் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வேளாண் பல்கலையில் நீர் வெப்ப திரவமாக்கல் உலைக்கு தேசிய காப்புரிமை appeared first on Dinakaran.

Tags : patent ,Agricultural University ,Coimbatore ,Tamil Nadu Agricultural University ,Department of Renewable Energy Engineering ,Divya Bharti ,Dinakaran ,
× RELATED கோவை வேளாண் பல்கலை.யில் 6-வது மலர் கண்காட்சி: துணைவேந்தர் துவக்கி வைத்தார்