கும்பகோணம், அக்.6: கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சேகரன், தலைமை காவலர்கள் மதன்குமார், கோபி, கார்த்திகேயன் மற்றும் போலீசார் கபிஸ்தலம் காவல் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கபிஸ்தலம் பாலக்கரையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த ஒருவரை வழிமறித்து சோதனை செய்தனர்.
சோதனையில் அவர் கபிஸ்தலம் அருகே உள்ள நாயக்கர் பேட்டை, பாரதி நகரை சேர்ந்த இளங்கோவன் மகன் பரத் (20) என்பதும், அவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் கஞ்சா பாக்கெட்டுகள் வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கஞ்சா பாக்கெட்டுகளை அய்யம்பேட்டையில் இருந்து விற்பனைக்கு வாங்கி வருவதாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் அய்யம்பேட்டை காந்தி நகரை சேர்ந்த குமார் மனைவி சித்ரா (44) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவருடன் சேர்ந்து தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் செந்தூர்வேலன் (28), அய்யம்பேட்டை ரிஸ்வான் நகரை சேர்ந்த செல்வம் மகன் சூர்யா (17) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனங்கள், எடை போடும் மெஷின், 5 செல்போன்கள், பாலித்தீன் பைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post கபிஸ்தலம் பகுதியில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.