×
Saravana Stores

திமுக ஆட்சி குறித்து அவதூறு பரப்புவதா ரூ.3,500 கோடி கோயில் நிலங்களை மீட்டது தவறா? பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற “வள்ளலார் – 200” ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழாவில் பேசியதாவது: வள்ளலார் 200வது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், ‘தனிப்பெரும் கருணை நாளில்’ இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டுதோறும், அன்னதானம் வழங்குவதற்கான நிகழ்ச்சியையும் அன்றைக்கு தொடங்கி வைத்தேன். அதற்காக ரூ.3 கோடியே 25 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

அது ஒருநாள் விழாவாக மட்டும் நடத்தி முடித்துவிடவில்லை. ஆண்டு முழுவதும் நடைபெறும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார். ஆண்டு முழுவதும் எப்படி நடத்துவார்கள் என்பதை அறிய நானும் ஆர்வமாக இருந்தேன். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான 52 வாரங்களும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பி.கே.கிருட்டிணராஜ் வானவராயர் தலைமையில் 14 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்களது ஆலோசனைப்படி 52 வாரங்களும் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்திருக்கிறது.

சென்னையில், கலந்து கொண்டது முதல் நிகழ்ச்சி. இதன் தொடர்ச்சியாக 50 வாரங்களாக 50 நகரங்களில் வள்ளலார் – முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது. இப்போது இங்கு கலந்து கொள்ளும் இந்த நிறைவு விழா, 52-ஆவது நிகழ்ச்சி ஆகும். திராவிட மாடல் அரசு என்று சொல்லிக் கொள்கிறார்கள். கோவில்கள் அனைத்தையும் பொன்போல போற்றிப் பாதுகாக்கிறார்களே – இவர்களை என்ன சொல்லி குற்றம் சாட்டுவது என்று சிலருக்கு குழப்பமாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை செய்ய வருகை வந்த பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றிப் பேசி இருக்கிறார்கள். அவர் மத்தியப் பிரதேசத்திற்கு சென்று பேசினாலும், அந்தமானில் பேசினாலும், தெலங்கானாவில் பேசினாலும், தமிழ்நாட்டைப் பற்றித் தான் பேசுகிறார். அவரால் மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களை, திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில் சொத்துகள் மற்றும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்று பகிரங்கமாக பேசி இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். பிரதமருக்கு நான் எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின் பிரதமர் தவறான அவதூறு செய்தியை சொல்வது சரியா? ஒரு மாநிலத்தின் செயல்பாடு குறித்து இன்னொரு மாநிலத்தில் போய் பேசுவது முறையா? தர்மமா?

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கோவில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும் வருமானங்கள் முறை கேடாக பயன்படுத்தப்படுவது போலவும் பொய்யான செய்தியை இந்திய நாட்டின் பிரதமர் கட்டமைக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் யாருக்காக பேசுகிறார்? யாருடைய குரலை எதிரொலிக்கிறார்? இந்த இரண்டு ஆண்டு காலத்தில் ரூ.3,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இது தவறா? சொல்லுங்கள் இது தவறா? 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம். இது தவறா?

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவறா?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள 1250 திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தவறா? எதைத் தவறு என்கிறார் பிரதமர்? பிரதமர் பார்வையில்தான் தவறு இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரையும் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற பொதுத் தன்மையுடனான ஆட்சியை நடத்தி வருகிறோம். கருணையுள்ள ஆட்சியை நடத்தி வருகிறோம்.

அதனால்தான் கருணை வடிவிலான வள்ளலாரைப் போற்றுகிறோம்.அதற்கு அடையாளமாக வள்ளலார் – 200 நிகழ்ச்சியில் ஓர் அறிவிப்பைவெளியிட விரும்புகிறேன். கடலூர் மாவட்டத் தலைநகரில் 17 ஏக்கரில் அமைக்கப்பட இருக்கின்ற புதிய பேருந்து நிலையத்திற்கு “அருள்பிரகாச வள்ளலார்” பெயர் சூட்டப்படும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வழியில், வாடிய உயிர்கள் அனைத்தையும் வாழ வைக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி என்றைக்கும் செயல்படும், இது உறுதி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். பிரதமர் பார்வையில்தான் தவறு இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரையும் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற பொதுத் தன்மையுடனான ஆட்சியை நடத்தி வருகிறோம். கருணையுள்ள ஆட்சியை நடத்தி வருகிறோம்.

The post திமுக ஆட்சி குறித்து அவதூறு பரப்புவதா ரூ.3,500 கோடி கோயில் நிலங்களை மீட்டது தவறா? பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M. K. Stalin ,Modi ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Department of Hindu Religious Charitable Trusts ,Kalaivanar Arena, Chennai ,Vallalar ,CM ,Stalin ,
× RELATED மக்களால் ஒதுக்கப்பட்ட உங்களைப் பற்றி...