×

மருத்துவக் கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

சென்னை: தனியார் மருத்துவ கல்லூரிகள், தனியார் தொழிற்சாலை, நட்சத்திர ஓட்டல்கள் என 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தனியாருக்குச் சொந்தமான தொழிற்சாலைகள், மருத்துவ கல்லூரிகள், நட்சத்திர ஓட்டல்கள், கலை கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை சோதனை நடத்தினர். குறிப்பாக, பூந்தல்லி அருகே உள்ள சபீதா மருத்துவக் கல்லூரி அதன் குழுமத்துக்குச் சொந்தமான கல்லூரிகள், சென்னை குரோம்பேட்டை, தாம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், ஜிஎன் செட்டி தெருவில் உள்ள நட்சத்திர ஓட்டல், வண்டலூர் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், பல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி, வாலாஜாபாத் அருகே உள்ள மதுபான தொழிற்சாலைகள், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட் மற்றும் புதுச்சேரி மாநிலம் அகரம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி என 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனை நடந்த இடங்களில் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், சவிதா மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவ கல்லூரி, பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குழுமங்களின் நிறுவனராகவும், வேந்தராகவும் இருப்பவர் டாக்டர் வீரய்யன். இவருக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் உள்ள மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குழுமங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து இந்த சோதனை நடந்தது.

ஈரோடு சம்பத் நகரில் உள்ள சவிதா மருத்துவ குழுமங்களின் நிறுவனர் டாக்டர் வீரய்யனுக்கு சொந்தமான வீடு மற்றும் வீட்டின் கீழ் பகுதியில் உள்ள எம்எம் இந்தியா மெடிக்கல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திலும் நேற்று ஈரோடு, கோவையை சேர்ந்த வருமான வரித்துறையை சேர்ந்த 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர்‌ தீவிர சோதனையில் ஈடுபட்டனர். டாக்டர் வீரய்யன் பல ஆண்டுகளுக்கு முன்பே சம்பத் நகரில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு சென்னையில் குடியேறிவிட்ட நிலையில், பழைய வீடு என்பதால் ஆவணங்கள் ஏதாவது வைக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகின்றது. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. சோதனை முடிவிற்கு பிறகு தான் முழு விபரங்கள் தெரிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மருத்துவக் கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,STAR CAFES ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...