×

குமரி மாவட்டத்தில் கனமழை, பலத்த காற்று எதிரொலி 2500 படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை: வரத்து குறைவால் வெறிச்சோடிய மீன் சந்தைகள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை, பலத்த காற்று காரணமாக 2,500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்வரத்து குறைந்துவிட்டதால் மீன் சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடலோர பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் அதிகாலை சுமார் 5 மணிக்கு 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்கிறார்கள்.

மீன்களை பிடித்துவிட்டு இரவு சுமார் 9 மணியளவில் கரை திரும்புவார்கள். இந்தநிலையில் கடலோர கிராமங்களில் கனமழை காரணமாக 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. அதேபோல் கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கோவளம் போன்ற மீனவ கிராமங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் தேங்காப்பட்டணம் மின்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு, பைபர் படகு, வள்ளம் என்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.

ஆனால் கடந்த 3 நாட்களாக பைபர் படகு, கட்டுமரபடகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இன்றும் சுமார் 1500 படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் நித்திரவிளை, கொல்லங்கோடு, ஊரம்பு மீன்சந்தைகளில் புதிய மீன்வரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. கனமழை தொடரும் பட்சத்தில், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்றால் மீன்பிடித்தொழில் வெகுவாக பாதிக்கப்படும். இதனால் மீனவர்கள் கவலையடைந்து உள்ளனர். அதேபோல் மீன் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பாக மீன் பிரியர்களுக்கும் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

 

The post குமரி மாவட்டத்தில் கனமழை, பலத்த காற்று எதிரொலி 2500 படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை: வரத்து குறைவால் வெறிச்சோடிய மீன் சந்தைகள் appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Kanniyakumari ,Kanniyakumari district ,Dinakaraan ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...