×

தஞ்சையில் நாளை கி.வீரமணி எழுதிய நூல் வெளியீட்டு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தஞ்சை: தஞ்சையில் நாளை மாலை கி.வீரமணி எழுதிய நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு பேசுகிறார். தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மாநாட்டு அரங்கத்தில் திக சார்பில் நாளை (6ம் தேதி) மாலை 5 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. தி.க. துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்கிறார். தி.க. தலைவர் வீரமணி தலைமை வகிக்கிறார். விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. மேலும் வீரமணி தொகுத்த, ‘தாய் வீட்டில் கலைஞர்’ என்ற நூலை முதலமைச்சர் வெளியிட, முதல் நூலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணைமேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

பின்னர் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி, மேற்குவங்க முன்னாள் தலைமைச் செயலாளர் பாலச்சந்திரன், பாலபிரஜாபதி அடிகளார் பாராட்டி பேசுகின்றனர். இறுதியில் முதல்வர் ஸ்டாலின் நிறைவுரை ஆற்றுகிறார். இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பிற்பகல் சென்னையிலிருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் தஞ்சை சென்று விழாவில் பங்கேற்கிறார். விழா முடிந்ததும் இரவு காரில் புறப்பட்டு திருச்சி வந்து விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி, தஞ்சையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

The post தஞ்சையில் நாளை கி.வீரமணி எழுதிய நூல் வெளியீட்டு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Tanjay ,Thesis Publication Ceremony ,Weeramani ,Stalin ,BC ,Thesis Publication ,Dinakaraan ,
× RELATED திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சியில்...