×

லிவிங் டூ கெதர் முறிவால் ஆத்திரம்; கூலிப்படை மூலம் 20 வயது வாலிபரை கொல்ல முயன்ற 40 வயது பெண்

திருமலை: கணவரை பிரிந்த 40 வயது பெண்ணுக்கும், 20 வயது வாலிபருக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த நிலையில் அந்த பெண்ணை வாலிபரின் பெற்றோர் விரட்டினர். இதனால் அந்த பெண், வாலிபரை கூலிப்படை வைத்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நல்லப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (20), மினரல் வாட்டர் கம்பெனி ஊழியர். இவர் குண்டூரில் உள்ள பல இடங்களுக்கு ஆட்டோக்களில் தண்ணீர் கேனை எடுத்துச்சென்று கடைகள் மற்றும் வீடுகளில் விநியோகித்து வருவது வழக்கம்.

ராமிரெட்டிதோட்டா பகுதியை சேர்ந்தவர் ராதா (40). திருமணமான இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசிக்கிறார். இவரது மகளுக்கு திருமணமாகிவிட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷுக்கும், ராதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது ராதா, `கணவரை பிரிந்த என்னை வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்துகொள்’ என கேட்டுள்ளார். அதற்கு வெங்கடேஷூம் ஒப்புக்கொண்டாராம். இதனால் இருவரும் `லிவிங் டூ கெதர்’ பாணியில் வாழ தொடங்கினர். அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷிடம், `நான் உனது வீட்டில் உன்னுடன் சேர்ந்து வாழவேண்டும். யாருக்கும் சந்தேகம் இல்லாமல் வாழலாம்’ என ராதா கேட்டுள்ளார். அதனை ஏற்ற வெங்கடேஷ், ராதாவை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.

அங்கு தனது பெற்றோரிடம், `ராதா கணவரை பிரிந்து கஷ்டப்படுகிறார். அவர் வேலை கிடைக்காமல் உள்ளார். எனவே நமது வீட்டில் சில மாதங்கள் தங்கிவிட்டு செல்லட்டும்’ என கூறியுள்ளார். இதனை நம்பிய வெங்கடேஷின் பெற்றோரும் அவர்களது வீட்டில் உள்ள ஒரு அறையில் ராதாவை தங்க வைத்தனர். நள்ளிரவு நேரங்களில் வீட்டில் அனைவரும் தூங்கியபிறகு ராதாவும், வெங்கடேஷூம் உல்லாசமாக இருந்துள்ளனர். பகலில் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் நடந்து கொண்டனர். ஆனால் ராதா-வெங்கடேஷின் நடவடிக்கை அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து வெங்கடேஷின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

அதன்பேரில் கடந்த வாரம் ராதாவை வெங்கடேஷின் பெற்றோர் அழைத்து, `இனி எங்கள் வீட்டில் நீ தங்கக்கூடாது, உடனே வெளியேறி விடு’ எனக்கூறியுள்ளனர். ஆனால் ராதா வெளியேற மறுத்துள்ளார். அப்போது தனது பெற்றோருடன் சேர்ந்துகொண்டு வெங்கடேஷூம் ராதாவை வெளியே தள்ளி விரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து குண்டூர் போலீசில் கடந்த 30ம்தேதி ராதா புகார் செய்தார். புகாரில், `கணவரை பிரிந்த எனக்கு வாழ்வு தருவதாக கூறி வெங்கடேஷ் என்னுடன் தொடர்பு வைத்துக்கொண்டார். இதனால் திருமணம் செய்துகொள்ளாமல் நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தோம். தற்போது என்னை வீட்டில் இருந்து விரட்டிவிட்டனர்’ என புகாரில் தெரிவித்தார்.

அதன்பேரில் வெங்கடேஷ் மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் வெங்கடேஷை தீர்த்துக்கட்ட ராதா திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்று கூலிப்படையை சேர்ந்த 3 பேரை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு சென்றார். குண்டூர் அருகே வெங்கடேஷ் செல்லும் பாதையில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த வெங்கடேஷை, கூலிப்படையினர் விரட்டிச்சென்று இரும்பு ராடால் சரமாரி தாக்கியுள்ளனர். பின்னர் ராதா, தான் கொண்டுவந்த ஆசிட்டை எடுத்துவந்து வெங்கடேஷ் மீது வீசியுள்ளார்.

இதில் முதுகு பகுதி முழுவதும் காயம் ஏற்பட்டது. மேலும் இரும்பு ராடால் தாக்கியதில் காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் ராதா மற்றும் கூலிப்படையினர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அங்கிருந்தவர்கள் வெங்கடேஷை குண்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக குண்டூர் போலீசார் வழக்குப்பதிந்து ராதா மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 வாலிபர்களை தேடிவருகின்றனர்.

The post லிவிங் டூ கெதர் முறிவால் ஆத்திரம்; கூலிப்படை மூலம் 20 வயது வாலிபரை கொல்ல முயன்ற 40 வயது பெண் appeared first on Dinakaran.

Tags : Living ,Two Kedar ,Waliber ,ALIBAR ,Living Two Kedar ,Dinakaraan ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...