×

பன்மடங்கு லாபம் தரும் பாக்கு

கொட்டைப்பாக்கு, கொழுந்து வெத்தலை என்பது போன்ற வரிகள் பல தமிழ்த்திரைப்படங்களில் இடம்பிடித்திருக்கின்றன. நாமும் அவற்றை ரசித்திருக்கிறோம். தமிழ்த் திரைப்படம் மட்டுமில்லை, தமிழ் பண்பாட்டின் வரலாறு நெடுக பாக்கு – வெற்றிலை முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. நமது நல்லது, கெட்டதுகளில் பாக்கு – வெற்றிலைக்கு முக்கிய இடம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் விருந்தினர்களை வரவேற்பது பாக்கு – வெற்றிலைதான். இத்தகைய முக்கியத்துவம் மிக்க இந்த பயிர்கள் நமது அனைத்து ஊர்களிலும் விளைவதில்லை. கும்பகோணம், தூத்துக்குடி உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெற்றிலை விளைகிறது.

இதைவிட பாக்கு விளையும் இடம் மிக குறைவு. மலைகள் இருக்குமிடம்தான் பாக்குக்கு தோது. மற்ற இடங்களிலும் சிலர் விளைவித்து வருகிறார்கள். ஆனால் எதிர்பார்த்த விளைச்சலை ஈட்ட முடியாது. இதனால் பாக்கு விளையும் பூமியான கொங்கு நாட்டிற்கு பயணமானோம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கெட்டவாடி அருகே உள்ள பெலத்தூர் கிராமத்தில் தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் பாக்கு விவசாயத்தில் ஈடுபடும் பெண் விவசாயி பாவாத்தாளை சந்தித்தோம். பாக்கு சாகுபடி குறித்து பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம்தான் எங்களுக்கு சொந்த ஊரு. எங்க வீட்டுக்காரரு மாரப்பன் தனியார் சர்க்கரை ஆலையில உதவி கரும்பு அலுவலரா வேலை பார்த்தாரு. அப்போ அவரு பல ஊர்களுக்கு போவாரு. வேலை சம்பந்தமா நாங்க கோயம்புத்தூர் சிறுவாணி பக்கத்துல இருக்குற ஆலாந்துறை, ஈரோடு சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகள்ல தங்கி இருக்கோம். அப்போ இந்த பகுதிக்கும் வருவோம். இங்க இருக்குற இயற்கை சூழல் பிடிச்சி இருந்தது. விவசாயத்து மேலயும் ஆர்வம் வந்ததால 2000 வருசத்துல இந்த பகுதியில 7 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினோம். காடா கிடந்த இந்த நிலத்தை திருத்தி விவசாயம் பார்க்குற மாதிரி ஆக்குனோம். இந்த பகுதியில யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் வந்து நாசம் பண்ணும். அதுக்காக சோலார் கம்பி வேலியும் போட்டோம். ஆனா அப்போ என்ன பண்றதுன்னு தெரியாததாலயும், அவருக்கு வேலை இருந்ததாலயும் நிலத்தை குத்தகைக்கு கொடுத்துட்டோம். விவசாயத்து மேல இருக்குற ஆர்வம் அதிகமானதால 2015ல அவரு விஆர்எஸ் கொடுத்துட்டு வந்துட்டாரு. இங்கேயே வீடு கட்டி விவசாயத்துல இறங்க ஆரம்பிச்சிட்டோம். இப்போ ஒன்றரை ஏக்கர்ல தென்னை, ஒன்றரை ஏக்கர்ல உருளைக்கிழங்கு, ஒன்றரை ஏக்கர்ல வாழை, ரெண்டரை ஏக்கர்ல பாக்குன்னு விவசாயம் பண்றோம்.

காய்கறி, பூக்கள் சாகுபடி செய்றதுக்கு வேலை செய்ய அதிகளவுல ஆட்கள் தேவைப்படுவாங்க. ஆனா இங்க ஆட்கள் கிடைக்க மாட்றாங்க. பாக்கு விவசாயத்துல அதிகமா பராமரிப்பு வேலை இருக்காது. இதனால நாங்க கடந்த 6 வருசத்துக்கு முன்ன 50 சென்ட்ல பாக்கு சாகுபடி செய்ய ஆரம்பிச்சோம். 1 வருசம் கழிச்சு மேலும் 2 ஏக்கர்ல சாகுபடி செஞ்சோம். பாக்கு சாகுபடி செய்ய நல்ல நிழல் வேணும். அதுக்காக முதல்ல ஜி- 9 வாழை சாகுபடி செஞ்சோம். அதுக்காக தொழுவுரத்தை கொட்டி, டிராக்டர் வச்சி நிலத்தை நல்லா 2 முறை உழவு பண்ணுனோம். அப்புறமாக ரொட்டவேட்டர் வச்சி நல்லா கட்டியில்லாம உழவு பண்ணுனோம். உழவு பண்ணிட்டு 7 அடிக்கு ஒன்னுன்னு பார் அமைச்சோம். அந்த பார்ல 7 அடி இடைவெளில, அரை அடி அளவுல குழியெடுத்து செடி நட்டோம். அதுக்கு சொட்டு நீர்க்குழாய் மூலமாக வாரம் ஒரு பாசனம் செஞ்சோம். நடவு பண்ண 3வது மாசத்துல செடிகள்லாம் நல்லா தழைஞ்சி வரும். அப்போது செடிக்கு 4,5 இலை வந்துருக்கும். அந்த சமயத்துல ஒவ்வொரு வாழை மரத்திற்கும் இடையில 1 அடி ஆழம், 1 அடி அகலம், 1 அடி நீளம் கொண்ட குழிகளை எடுத்து பாக்குச்செடிகளை நட்டோம். நடவு செய்ய கோவை மேட்டுப்பாளையம் பக்கத்துல இருக்குற கல்லாறு அரசுப்பண்ணைல செடிகளை வாங்கினோம். ஒரு செடி 13 ரூபான்னு அங்க கொடுத்தாங்க. செடிகளை நடும்போது குழிக்கு 200 கிராம் தொழுவுரம் போட்டோம். நடுறதுக்கு முன்னாடி வாழைக்கு இடையில களையெடுத்து நிலத்தை புல், பூண்டு இல்லாம பாத்துக்கிட்டோம். அப்புறமா மாசம் ஒருமுறை களையெடுப்போம்.

வாழை நட்ட 3வது மாசத்துல ஏக்கருக்கு 2 மூட்டை டிஏபி, 2 மூட்டை காம்ப்ளக்ஸ், 1 மூட்டை பொட்டாஷ், 1 மூட்டை அம்மோனியம் சல்பேட், 10 கிலோ நுண்ணூட்ட கலவை ஆகியவற்றைக் கலந்து வாழை மரத்திற்கு அருகில் போடுவோம். இல்லன்னா கடப்பாறை வச்சி வாழை மரத்தின் 4 பக்கமும் சின்னதா குழியெடுத்து அதில போடுவோம். 6வது மாசத்துல காம்ப்ளக்ஸ் 2 மூட்டை, பொட்டாஷ் 2 மூட்டை வைப்போம். 8 மாசத்துல வாழையில குலை தள்ள ஆரம்பிக்கும். அப்போதில் இருந்து 10 நாளுக்கு ஒருமுறை பொட்டாஷ் 10 கிலோ, சல்பேட் 5 கிலோ கலந்து சொட்டுநீர்க்குழாய் மூலமாக கொடுப்போம். இதனால் குலைகள் திரட்சியா வளரும். 11, 12 மாசத்துல குலைகளை அறுவடை பண்ணிரலாம். அந்த சமயத்துல ஒவ்வொரு மரத்துலயும் 4,5 பக்கக்கன்று வரும். அதில ஆரோக்கியமாக இருக்கிற 1 செடியை மட்டும் விட்டுட்டு மத்த செடிகளை அகற்றிடணும். அந்த ஒரு செடிக்கு மறுபடியும் உரம், பாசனம் கொடுத்து 2வது வருசமும் குலை பறிக்கலாம். ஒரு அறுவடையில 500 தார் கிடைக்கும். ஒரு தார் 30 கிலோ வரை எடை இருக்கும். ஒரு கிலோ பழம் 5 லிருந்து 10 ரூபா விலை போகும். சராசரியா 7 ரூபா கிடைக்கும். 500 தார் மூலமா 15 ஆயிரம் கிலோ பழம் கிடைக்கும். இதன்மூலமா 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபா வருமானமாக கிடைக்கும். 2வது அறுவடைலயும் அதே அளவு வருமானம் பார்க்கலாம். இதுல காய்ப்பு, விலை கொஞ்சம் முன்ன, பின்ன வரும்.

2 வருசம் கழிச்சி வாழை மரங்களை முழுசா நிலத்துல இருந்து அகற்றிடணும். அந்த சமயத்துல பாக்கு செடிகளுக்கு சூரிய ஒளி கிடைக்கணும். இல்லன்னா செடி வேகமா வளர்ந்துடும். இதனால மரத்தோட ஆயுள் கம்மியாகும். விளைச்சலும் குறையும். இதனால வாழைய அறவே அகற்றிடணும். வாழைய அகற்றின பிறகு 4 டிராக்டர் தொழுவுரம் போடுவோம். அந்த சமயத்துல 1 மூட்டை டிஏபி, 1 மூட்டை காம்ப்ளக்ஸ், 1 மூட்டை பொட்டாஷ் போடுவோம். அந்த சமயத்துல மினி டில்லர் வச்சி உழவு பண்ணுவோம். அதன்மூலமாக மண்ணும், உரங்களும் மிக்சாகிடும். உழவு ஓட்டின பிறகு பாசனம் செய்வோம். வெயில் அதிகமா இருந்தா 5 நாளுக்கு ஒரு பாசனம் செய்வோம். பாக்குக்கு ஈரப்பதம் இருந்துகிட்டே இருக்கணும். வருசம் ஒருமுறை உரம் போடுவோம்.

இப்படி பராமரிச்சிகிட்டு வந்தா 5வது வருசத்துல பாளை வர ஆரம்பிக்கும். ஏப்ரல், மே மாதங்கள்ல குலை வர ஆரம்பிச்சிதுன்னா நவம்பர், டிசம்பர் மாதங்கள்ல அறுவடை செய்ய ஆரம்பிச்சிடுவோம். 60 சென்ட் நிலத்துல 500 மரம் வச்சிருக்கேன். இதில எப்படியும் 300 மரம் பலன் தரும். இந்த முதல் அறுவடையில சுமாராத்தான் மகசூல் கிடைக்கும். இதில மொத்தமா 1700 கிலோ மகசூல் கிடைச்சிது. ஒரு கிலோ சராசரியா 55 ரூபாய்னு விற்பனை செஞ்சோம். அதன்மூலமா 93,500 ரூபா வருமானம் கிடைச்சிது. இப்போ 6வது வருசம் தொடங்கி இருக்கு. ஓரளவு குலை நல்லா தள்ளி இருக்கு. 400 மரத்துல குலைகள் இருக்கு. ஒவ்வொரு மரத்திலயும் 4 குலை இருக்கு. ஒரு மரத்தில இருந்து நிச்சயமா 15 கிலோ மகசூல் கிடைக்கும்.

400 மரங்கள்ல இருந்து 6 ஆயிரம் கிலோ மகசூல் கிடைக்கும். குறைஞ்சது கிலோ 50 ரூபான்னு வித்தா கூட 3 லட்சம் வருமான கிடைக்கும். இதில அதிகபட்சமாக 1 லட்சம் செலவானா கூட 2 லட்சம் சுளையா லாபம் கிடைக்கும். ஒவ்வொரு வருசமும் விளைச்சல் கூடி லாபமும் அதிகமா கிடைக்கும். சேலம் ஆத்தூர், கர்நாடகா சாம்ராஜ் நகர் பகுதிகள்ல இருந்து வியாபாரிகள் நேரடியா வயலுக்கே வந்து பாக்குகளை அறுவடை செஞ்சு எடுத்துக்கிட்டு போயிடுறாங்க. அந்த நேரத்துல உரிய பணத்தையும் கொடுத்துடறாங்க. இதனால பாக்கு விவசாயம் எங்களுக்கு மகிழ்ச்சியான விவசாயமா இருக்கு’’ என கூறி முடிக்கிறார் பாவாத்தாள்.
தொடர்புக்கு:
பாவாத்தாள்: 86440 22100.

The post பன்மடங்கு லாபம் தரும் பாக்கு appeared first on Dinakaran.

Tags : Kottaipaku ,
× RELATED சொல்லிட்டாங்க…