×

நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்துவிடலாம்: உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: 2K கிட்ஸ் மத்தியில் பிரபலமான யூடியூபர் டிடிஎஃப் வாசன் சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே அபாயகரமாக இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்திற்குள்ளானார். இதையடுத்து அவர் பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்து செப்டம்பர் 19ம் தேதி அன்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் தரப்பில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து வாசன் தரப்பு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அவர் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் “சாலையில் மிதமான வேகத்தில் வந்த நிலையில், கால்நடைகள் சாலையைக் கடந்ததால் திடீரென பிரேக் போட்டதால், வாகனத்தின் சக்கரம் தூக்கியது. ஒருவேளை பிரேக் போடாமல் இருந்தால், கால்நடைகள் மற்றும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். நான் ஒரு அப்பாவி, நான் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை, நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவேன்” என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து “டிடிஎஃப் வாசன் தன்னை சமூக வலைத்தளத்தில் பின்தொடரும் 40 லட்சம் ரசிகர்களுக்காக இது போன்று செய்துள்ளார். இது போன்ற சாகசங்களை செய்ய வாசன் 2 முதல் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு கவச உடை மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பிலான பைக்கை வாங்கியுள்ளார். இவரின் செயலால் கவரப்படும் இளைஞர்களிடையே அதிவேகமாக சென்று வழிப்பறியில் ஈடுபடும் எண்ணம் ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஜாமின் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் “பைக்கை எரித்துவிட வேண்டும், விளம்பரத்திற்காக இது போன்ற செயலில் ஈடுபடும் டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும், வாசனுக்கு சிறையிலேயே உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்துவிடலாம்: உயர்நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Tags : DTF ,Vasan ,High Court ,Chennai ,TDF Vasan ,Kanchipuram ,Chennai – ,Vellore ,DTF Vasan ,Dinakaran ,
× RELATED யூ டியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர...