×

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் விநாயகர் சிலை வைத்து அரசு நிலம் ஆக்கிரமிப்பு: தாசில்தார் வேண்டுகோள்

ஆவடி, அக். 5: அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்தில் விநாயகர் சிலையை வைத்திருந்தனர். அதை அகற்றித் தரவேண்டும் தாசில்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில், திருமுல்லைவாயலில் இரண்டு ஆரம்ப சுகாதாரம் நிலையங்கள் உள்ள நிலையில், பச்சையம்மன் கோயில் அருகே குளக்கரை தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், போதுமான இடவசதி இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், திருமுல்லைவாயல், எட்டியம்மன் கோயில் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கி ₹1.20 கோடி மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சுகாதாரத் துறை முடிவு செய்து பொக்லைன் இயந்திரத்துடன் வந்து பணிகளை நேற்றுமுன்தினம் இரவு துவங்கினர்.
இதற்கு முன்பாக, ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் வரும் அந்த இடம் எட்டியம்மன் கோயிலுக்கு சொந்தமானது என கூறி, அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் அங்கு பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டது குறிப்பிடதக்கது. ஆனால், ஆவடி வருவாய் துறையிடம், அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என்பதற்கு கோப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் ஆரம்பித்த நேற்றுமுன்தினம் இரவு, 11.30 மணி அளவில், வருவாய்த்துறையினர், திருமுல்லைவாயல் போலீஸ் பாதுகாப்புடன் அந்த இடத்தை மீட்க சென்றனர். அப்போது, 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனவே, வருவாய்த்துறையினர் பாதியில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்பிரச்னை தொடர்பாக நேற்று மதியம், தாசில்தார் விஜயகுமார் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தாசில்தார் கூறியதாவது: அப்பகுதியில் உள்ள 14 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது. அதில் ஒரு ஏக்கர் நிலம், சுகாதார துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆகையால், பொதுமக்களே முன்வந்து அப்பகுதியில் உள்ள விநாயகர் சிலையை அகற்றி தரும்படி ேகட்டுள்ளோம் என கூறினார்.

The post ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் விநாயகர் சிலை வைத்து அரசு நிலம் ஆக்கிரமிப்பு: தாசில்தார் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Tirumullaivayal ,Avadi ,Tahsildar ,
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...