×

விழுந்தமங்கலம் கூட்டு சாலை – அரியனூர் இடையே ஜல்லி கற்கள் பெயர்ந்து மண் பாதையான தார் சாலை: விரைந்து சீரமைக்க கோரிக்கை

செய்யூர், அக். 5: விழுந்தமங்கலம் கூட்டு சாலை – அரியனூர் இடையிலான தார் சாலை மண் சாலையாக மாறியுள்ளது. இதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அருகே விழுதமங்கலம் கூட்டு சாலை – அரியனூர் இடையிலான சுமார் 5 கிமீ தூரம் கொண்ட தார் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக நெசப்பாக்கம், அரியனூர், கல்பட்டு, சின்ன வெண்மணி, நாகமலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லலாம். மேலும், இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் தினமும் இந்த சாலை வழியே பவுஞ்சூர், செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம் உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு பல்வேறு பணிகள் நிமித்தமாகவும் சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் பல ஆண்டுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக ஓணம்பாக்கம், நாகமலை பகுதிகளில் இயங்கும் கல் குவாரிகளில் இருந்து நூற்றுக்கணக்கான கனரக லாரிகள் தினமும் பாறாங்கற்கள், எம்-சாண்ட், பி-சாண்ட், ஜல்லி கற்கள் ஆகியவற்றை ஏற்றி செல்கின்றன. இதனால், அதிக லோடு காரணமாக சாலையில் பள்ளம் படுகுழியாக இருந்தது. தொடர் மழையின்போது சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால், இருசக்கர வாகன மற்றும் இதர வாகன ஓட்டிகள் இந்த சாலையில் பயணிப்பதில் பெரும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பல லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலை துறையினர் இப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை மேற்கொண்டனர். சாலை அமைக்கும் பணியின்போதே அப்பகுதி கிராமமக்கள் இச்சாலை வழியாக தினமும் இரவு, பகல் பாராமல் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருவதாகவும், இதனால் சாலை சில நாட்களிலேயே சேதமடைந்து போவதாகவும், எனவே அமைக்கப்படும் சாலை சேதமடையாத வகையில் தரமான முறையில் அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அதிகாரிகளோ பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தி புதிய தார் சாலையை தரமில்லாமல் அமைத்து முடித்துள்ளனர்.

இந்நிலையில், சாலை அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே சாலை ஆங்காங்கே பெயர்ந்து சேதமடைந்தது. இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் பழுதான பகுதியில் மீண்டும் புதிய சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, சாலையில் சேதமடைந்த பகுதிகளில் ஜல்லி கற்கள் போடப்பட்டது. ஆனால், அதன்மீது தார் சாலை அமைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். தற்போது, இவ்வழியாக செல்லும் வாகனங்களால் போடப்பட்ட ஜல்லி கற்கள் பெயர்ந்தும், பள்ளம் ஏற்பட்டும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், சாலை பள்ளம் படுகுழியாகவும், சேறும் சகதியுமாக தற்போது காட்சி அளிக்கிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் ஜல்லி கற்களால் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே, பாதியில் நிறுத்தப்பட்ட இந்த சாலை பணியை முழுமையாக நிறைவு செய்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்தில் சிக்கும் மாணவர்கள்
சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்போது, வாகனங்கள் செல்லும்போது சேறும் சகதியுமான மாறிவிடுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவியர் சேற்றில் சிக்கி விபத்திற்கு ஆளாகின்றனர். ஒருசிலர் உடைகள் சேறாக மாறிவிடுவதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிற்கு சென்று விடுகின்றனர். மேலும், டூவீலரில் செல்லும் வாகன ஓட்டிகள் டயர் பஞ்சாராகி விடுகிறது. சில நேரங்களில் சேற்றில் சிக்கி விழும் நிலையும் காணப்படுகிறது.

நடவடிக்கை வேண்டும்
தரமற்ற இந்த சாலையை மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பணியை மேற்கொண்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மாவட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
இந்த பகுதியில் அவ்வப்போது புதிய சாலை என்ற பெயரில் அதிகாரிகள் தரமற்ற முறையில் சாலையை அமைப்பதாக கூறப்படுகிறது. மேலும், சாலை அமைப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post விழுந்தமங்கலம் கூட்டு சாலை – அரியனூர் இடையே ஜல்லி கற்கள் பெயர்ந்து மண் பாதையான தார் சாலை: விரைந்து சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tar road ,Ariyamangalam ,Arianur ,Sayyur ,Kaltamangalam ,Tar ,Ayamangalam ,Dinakaran ,
× RELATED அரியமங்கலம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்..!!