×

வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம் மக்கள் பக்தியுடன் வழிபாடு கீழ்பென்னாத்தூர் அருகே

கீழ்பென்னாத்தூர், அக். 5: கீழ்பென்னாத்தூர் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்ததால் மக்கள் பக்தியுடன் வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நம்மியந்தல் கிராமத்தில் வேடியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே உள்ள வேப்பமரத்தில் நேற்று திடீரென பால் வடிந்தது. இந்த அதிசயம் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு பரவியது. கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து, பக்தி பரவசத்துடன் வேப்ப மரத்தில் வடியும் பாலை கண்டு வழிபட்டனர். அப்போது ஒரு பெண்ணுக்கு அருள் வந்து, ‘நான் இங்குதான் இருப்பேன், எனக்கு தினமும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
குலதெய்வ கோயிலான வேடியப்பன் கோயிலில் காலங்காலமாக பொதுமக்கள் வழிபட்டு வந்த நிலையில் தற்போது கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அங்கு இருந்த வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் மரத்தில் கடவுள் இருப்பதாக எண்ணி அப்பகுதி மக்கள் திரண்டு வழிபட்டு வருகின்றனர்.

இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர். அத்துடன், வேப்ப மரத்தில் கசிந்த பாலை அம்மனின் தீர்த்தமாக கருதி வழிபாடு செய்து தலையில் தெளித்துக் கொண்டனர். இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இயல்பாகவே வேப்பமரத்தில் உள்ள மாவுச் சத்தை வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். அப்போது, நீர்ப்பிடிப்பு பகுதியில் வேப்ப மரங்களில் உள்ள நீர் அளவு அதிகமாகி, மரப்பட்டையின் அடியில் உள்ள திசு பாதிக்கும். இதுவே மரத்திலுள்ள மாவுச்சத்து பட்டை வழியே பிளந்து கொண்டு பால் போல் கசியும். இதையே பொதுமக்கள் பால் வடிகிறது என்கிறார்கள். மரத்தில் தண்ணீர் அளவு குறையும்போது திசு வளர்ந்து இடைவெளி அடைபட்டதும் அது தானாகவே நின்று விடும் என்றார்.

The post வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம் மக்கள் பக்தியுடன் வழிபாடு கீழ்பென்னாத்தூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Kilibennathur ,KILIPENNATHUR ,Tiruvannamalai District ,
× RELATED விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி...