×

பிரமனூர் கண்மாயில் கருவேல மரம் வெட்டியதில் முறைகேடு புகார் வருவாய் துறையினர் விசாரணை

திருப்புவனம்: திருப்புவனம் அருகே பிரமனூர் கண்மாயில் விதிகளை மீறி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் மரங்களை வெட்டியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று நேரில் விசாரணை நடத்தினர். திருப்புவனம் அருகே பிரமனூர் கண்மாய் சுமார் 750 ஏக்கர் பரப்பளவு உள்ளது. கண்மாயை நம்பி பிரமனூர், வாடி, வயல்சேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மழை காலம் தொடங்கியதை அடுத்து கண்மாயில் உள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்ற வனத்துறை ஒப்பந்தம் கோரியது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பத்து ஏக்கரில் மட்டும் கருவேல மரங்களை வெட்டி அகற்ற மதுரையைச் சேர்ந்த விறகு வியாபாரியிடம் ஒப்பந்தம் பெறப்பட்டது.

ஆனால் வருவாய்த் துறைக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள கருவேல மரங்களை விதிகளை மீறியும், காலக்கெடுவை மீறியும் வெட்டி கடத்தியதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதுசம்பந்தமாக பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில், பிரமனூர் கண்மாய் விவசாயிகள் சிவகங்கை கலெக்டரிடம் நேரில் புகார் செய்தனர். இதனையடுத்து கருவேல மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் மண்டல துணை தாசில்தார் ராமநாதன்,வருவாய் ஆய்வாளர் வடிவேல் வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். விவசாயி சந்திரகுமார் கூறுகையில், அரசு மதிப்பின்படி 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் டன் விறகு வெட்டப்பட்டுள்ளது. மார்க்கெட் மதிப்பில் ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள விறகைவெட்டி கடத்தி விட்டனர். விதிமுறை மீறி விறகு வெட்டியவர்களிடமிருந்து அரசுக்கு ஏற்பட்ட இழப்பை வசூலிக்க வேண்டும். துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்தபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post பிரமனூர் கண்மாயில் கருவேல மரம் வெட்டியதில் முறைகேடு புகார் வருவாய் துறையினர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Bramanur Kanmai ,Tiruppuvanam ,Tirupuvanam ,
× RELATED திருப்புவனம் பாமக பிரமுகர் கொலை...