×

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு காஸ் மானியம் ரூ.300 ஆக அதிகரிப்பு: ஒன்றிய அமைச்சரவை அறிவிப்பு

புதுடெல்லி: உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும் காஸ் சிலிண்டர் மானியத்தை ரூ.200ல் இருந்து ரூ.300 ஆக அதிகரித்து ஒன்றிய அமைச்சரவை அறிவித்துள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்து ஒன்றிய அரசு அறிவித்தது. இதன் மூலம், ரூ.1000க்கு அதிகமாக இருந்த காஸ் சிலிண்டர் விலை ரூ.903 ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு காஸ் சிலிண்டர் மானியத்தை மேலும் ரூ.100 உயர்த்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு காஸ் மானியமாக ரூ.200 வழங்கப்பட்டு வந்தது. பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் இந்த மானியம் தற்போது ரூ.300 ஆக அதிகரிப்பதென அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நாடு முழுவதும் 9.6 கோடி உஜ்வாலா திட்ட குடும்பங்கள் பயனடையும் என ஒன்றிய அரசு கூறி உள்ளது. மானியம் உயர்த்தப்பட்டதன் மூலம் உஜ்வாலா திட்ட பயனாளிகள் இனி ரூ.603க்கு காஸ் சிலிண்டர்களை பெறலாம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால், காஸ் சிலிண்டரை ரூ.500க்கு வழங்குவோம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வரும் நிலையில் ஒன்றிய அரசின் இந்த மானிய அதிகரிப்பு கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. இந்த விலை குறைந்த தேர்தலுக்காக மட்டுமே என்றும் ஐந்து மாநில தேர்தல் முடிந்ததும், மீண்டும் காஸ் சிலிண்டர் விலையை பாஜ அரசு ரூ.300 உயர்த்திவிடும் என்றும் காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் கூறி உள்ளார்.

The post உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு காஸ் மானியம் ரூ.300 ஆக அதிகரிப்பு: ஒன்றிய அமைச்சரவை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ujjwala ,Union Cabinet ,New Delhi ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு