×

டெல்லியில் பாஜ தலைவர்களை சந்தித்து சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு உடல் நலம் பாதிப்பு: பாத யாத்திரை 16ம் தேதி தொடங்கும் என பாஜ தலைமை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலையின் 3ம் கட்ட பாதயாத்திரை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜ தலைமை அறிவித்துள்ளது. டெல்லி சென்று பாஜ தலைவர்களை சந்தித்து விட்டு திரும்பிய நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் பாஜவுடன் இணைந்து தமிழ்நாட்டில் தேர்தல்களை சந்தித்து வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே வார்த்தைப்போர் வலுத்தது. இதை பாஜ தலைமை கண்டிக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதுபோன்ற எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

மேலும் பாஜ மேலிடம் அதை கண்டு கொள்ளவும் இல்லை. இதனால் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை காட்டிலும், ஒரே கூட்டணியில் உள்ள அதிமுகவை கதற விடுவதிலேயே அண்ணாமலை குறியாக இருந்தார். அதிமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறி, தனது மோதலை தொடங்கினார். இதை எதிர்பாராத அதிமுகவினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனாலும், அதிமுக தலைமையோ பாஜவை விமர்ச்சிக்கக் கூடாது என்று தனது கட்சியினரைேய கட்டிப் போட்டது. அதன் எதிரொலியாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என்று கூறி அதிமுகவினரை மீண்டும் அண்ணாமலை சீண்டினார். ஆனாலும், அசராத அதிமுக தலைமை கூட்டணி சம்பந்தமாக அண்ணாமலையுடன் பேச்சுவார்த்தை இல்லை, பாஜ மேலிடத்தில் தான் பேசுவோம் என்று கூறினார்.

இந்நிலையில் அண்ணாவை பற்றி இழிவாக பேசினார். இனியும் பொறுமையாக இருந்தால் தொண்டர்களே கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என்பதால் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. இதனால் பாஜவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழ்நாட்டில் எந்தவிதமான கூட்டணியை அமைப்பது என்பது குறித்து பாஜ தலைமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. கூட்டணி முறிந்ததால் பாஜ தலைமை அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

கூட்டணி முறிவுக்கு அண்ணாமலையின் நடவடிக்கை தான் காரணம் என்றும் தமிழ்நாடு பாஜ தலைவர்கள் பலர் மேலிடத்துக்கு புகார்களை தட்டி விட்டனர். இதனால் பாஜ தலைமை அண்ணாமலை மீது கடும் அதிருப்தி அடைந்தது. தமிழ்நாட்டில் எப்படியாவது அதிமுகவின் உதவியுடன் கால்பதிக்கலாம் என்று கனவு கண்ட பாஜ மேலிடத்திற்கு இது பேரதிர்ச்சியை அளித்தது. இதன் தொடர்ச்சியாகவே, அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து இதுதொடர்பாக பாஜ தலைமை விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.

டெல்லியில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டும் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு அண்ணாமலை டெல்லியில் தங்கியிருந்தார். இரண்டு நாட்கள் தலைவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்பினார். டெல்லியில் இருந்து நேற்று சென்னை திரும்பிய அண்ணாமலை ஆளே மாறி இருந்தார். டெல்லிக்கு செல்வதற்கு முன்பும், சென்று வந்ததற்கு பிறகும் அவரது முகத்தில் நிறைய வித்தியாசங்கள் தெரிந்தது. இந்நிலையில், அண்ணாமலைக்கு காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அண்ணாமலை உடல்நிலை தொடர்பாக, பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் கிளென் ஈகிள்ஸ் தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், ‘‘அண்ணாமலை இருமல், மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை வலி, உடல் வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நெஞ்சு பகுதியில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அவரது நுரையீரலில் லேசான வீக்கம் இருக்கிறது. எனவே, அண்ணாமலை மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்’’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜ கட்சியின் டிவிட்டர் பதிவில், ‘‘மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை, அக்டோபர் 6ம் தேதி தொடங்கவிருந்த நிலையில், மாநிலத் தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. நாளை(இன்று) திட்டமிட்டபடி மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெறும். திருத்தப்பட்ட நடைபயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும்’’ என்று பதிவிடப்பட்டுள்ளது. எனவே, அண்ணாமலையின் 3ம் கட்ட பாதயாத்திரை இன்று முதல் தொடங்குவதாக இருந்த நிலையில், மீண்டும் பாதயாத்திரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜ தலைமை அண்ணாமலை மீது கடும் அதிருப்தி அடைந்தது. தமிழ்நாட்டில் எப்படியாவது அதிமுகவின் உதவியுடன் கால்பதிக்கலாம் என்று கனவு கண்ட பாஜ மேலிடத்திற்கு இது பேரதிர்ச்சியை அளித்தது.

The post டெல்லியில் பாஜ தலைவர்களை சந்தித்து சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு உடல் நலம் பாதிப்பு: பாத யாத்திரை 16ம் தேதி தொடங்கும் என பாஜ தலைமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Chennai ,BJP ,Delhi ,Pada Yatra ,Tamil Nadu ,Padayatra ,
× RELATED தேர்தலில் பணப்பட்டுவாடா, போஸ்டர்...